
Last Updated:
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் விதிகள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.
ஜீன்ஸ் அணிந்து போட்டிக்கு வந்ததால் அபராத விதிக்கப்பட்ட உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன், உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ள சர்வதேச செஸ் கூட்டமைப்பின் விதிகள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.
அமெரிக்காவில் நடந்த உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வேவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் போட்டியிட்டார். இதில், 2ம் நாள் போட்டிக்கு கார்ல்சன் ஜீன்ஸ் அணிந்து வந்தார். இது சர்வதேச செஸ் கூட்டமைப்பு விதிமுறைப்படி தவறு ஆகும். விதிமுறைப்படி, வீரர்கள் போட்டியின்போது ஜீன்ஸ் அணியக் கூடாது. இதனால், மேக்னஸ் கார்ல்சனுக்கு இந்திய மதிப்பில் 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார் நடுவர் அலெக்ஸ் ஹோலோவ்சாக்.
மேலும், உடையை மாற்றிவிட்டு வந்து போட்டியை தொடரவும் மேக்னஸ் கார்ல்சனுக்கு நடுவர் அறிவுறுத்தினார். ஆனால், அதை கேட்க மேக்னஸ் கார்ல்சன் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. தற்போது முடியாது என்றும் மறுநாள் போட்டிக்கு ஜீன்ஸ் அணியாமல் வருவதாகவும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், அன்றைய போட்டியில் விளையாடக்கூடாது என நடுவர் அலெக்ஸ் உத்தரவிட்டார். இதையடுத்து யூடியூடிப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மேக்னஸ் கார்ல்சன், உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகுவதாக கார்ல்சன் அறிவித்துள்ளார்.
முதல் நாளில் ஏற்பட்ட தோல்வியால் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தன்னிடம் இருந்ததாகவும் ஆடையை பற்றி யோசிக்கவே இல்லை என்றும் அவர் விளக்கம் தந்திருந்தார். தொடர்ந்து ஆடையை மாற்ற தன்னை கட்டாயப்படுத்தியது, சுயமரியாதை பிரச்னையாக தனக்கு மாறிவிட்டதாகவும் விவரித்தார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு விதிமுறைப்படி டைகளுடன் கூடிய சூட்கள், முழு நீள பேண்ட் உள்ளிட்டவை அணிய மட்டுமே வேண்டும். சர்ச்சையான படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள், அரைக்கால், அரைக் கை சட்டைகள், கிழிந்த அல்லது ஓட்டை போடப்பட்ட ஜீன்ஸ்கள், ஜிம் ஆடைகள், அசுத்தமான ஆடைகள், குளிர்ச்சிக்கான மூக்கு கண்ணாடிகள், தொப்பிகள் உள்ளிட்டவற்றை அணியக்கூடாது. குட்டை பாவடைகள், மெல்லிய துணிகளால் ஆன ஆடைகள் உள்ளிட்டவற்றை பெண் போட்டியாளர்கள் அணியக்கூடாது என்றும் பல்வேறு ஆடை கட்டுப்பாடுகளை சர்வதேச செஸ் கூட்டமைப்பு பின்பற்றி வருகிறது.
இந்நிலையில், செஸ் வீரர், வீராங்கனைகள் ஃப்ரீஸ்டைல் முறையில் விளையாட கூடாது என்ற நோக்கத்துடன் இது போன்ற கட்டுப்பாடுகளால் சர்வதேச செஸ் கூட்டமைப்பு அச்சுறுத்துவதாக கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் தனது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
December 28, 2024 4:31 PM IST

