அமெரிக்காவின் பிடுஃபிக் விண்வெளி தளம் (Pituffik Space Base) கிரீன்லாந்தில் உள்ளது. இப்பகுதி அரிய கனிமங்கள் உள்ளிட்ட அபரிமிதமான இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. மேலும், உலக நாடுகள் தங்களின் வர்த்தக வரம்பை ஆர்க்டிக் வட்டத்தில் விரிவுபடுத்த முயல்கின்றன. குறிப்பாக, ரஷ்யா இந்த பகுதியை ஒரு மூலோபாய சந்தர்ப்பமாக பார்க்கிறது.
2019-ஆம் ஆண்டு அதிபராக இருந்தபோதும், கிரீன்லாந்தை கட்டுப்படுத்துவது குறித்த தனது விருப்பத்தை டொனால்டு ட்ரம்ப் உதிர்த்திருந்தார். ஆனால் அது கடைசி வரை எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.
ட்ரம்ப்பின் தற்போதைய கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள கிரீன்லாந்து பிரதமர், “நாங்கள் விற்பனைக்கு இல்லை, இனியும் எங்களை வாங்க முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ட்ரம்ப் தொடர்ந்து தனது கருத்துகளில் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில், பனாமா கால்வாயின் நடுவே அமெரிக்க கொடி நடப்பட்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதேபோல ட்ரம்ப்பின் மகன் எரிக் ஒரு படத்தை பகிர்ந்திருந்தார். அதில் கிரீன்லாந்து, கனடா, பனாமா கால்வாய் ஆகியவற்றை அமெரிக்கா ஆன்லைன் ஷாப்பிங் செய்வது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.
ட்ரம்பைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் பலத்தை அதற்கு சாதகமாக பயன்படுத்துவது குறித்த பிரச்சாரம் அவருக்கு இரண்டு வெற்றிகளை வழங்கியிருக்கிறது.
தனது முதல் ஆட்சிக் காலத்தில் மெக்சிகா – அமெரிக்க எல்லையில் ஆயுதமேந்திய வீரர்களை நிறுத்துவது, அதிக கட்டணங்களை விதிப்பது உள்ளிட்ட அச்சுறுத்தல் அவருக்கு பெரிதும் உதவின. இந்த முறையும் அதேபோன்ற ஓர் உத்தியை ட்ரம்ப் ஜனவரி 20 பதவியேற்புக்குப் பிறகு கையில் எடுக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

