நாடு முழுவதும் டிஜிட்டல் மயத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப மோசடிகளும் நாளுக்குநாள் புதுப்புது விதத்தில் உருவெடுத்து வருகின்றது.
தற்போது லேட்டஸ்ட்டாக சர்வதேச எண்களில் இருந்து ஒருவருக்கு தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள், அரசு அதிகாரிகளைப் போல் பேசி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில்,
”சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகளைத் தடுக்கும் அமைப்பை அக்டோபர் 22 அன்று தொலைத் தொடர்புத் துறை அறிமுகம் செய்தது. அடுத்த 24 மணிநேரத்தில் 1.35 கோடி அழைப்புகள், அதாவது சர்வதேச எண்களில் இருந்து இந்திய எண்களை தொடர்பு கொண்ட 90 சதவிகிதம் அழைப்புகள் மோசடி அழைப்புகளாக அடையாளம் காணப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சர்வதேச எண்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் முறையை கையாண்டு வருகிறார்கள். அதனால், அறிமுகம் இல்லாத சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் ‘சஞ்சார் சாத்தி இணையதளம் மூலம் புகார் அளிக்க வேண்டும்.
+91 இல் தொடங்காமல் +8, +85, +65 போன்ற எண்களில் தொடங்கும் சர்வதேச எண்களிலிருந்து அழைத்து அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
இதுபோன்ற அழைப்புகளை தடுப்பதற்காக தொலைத் தொடர்பு துறை பிரத்யேகக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.
தற்பொது ஏர்டெல் நிறுவனம் சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகளை சர்வதேச அழைப்பு என்று குறிப்பிடும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது. பிற நிறுவனங்களும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

