இரானில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டாய அறநெறிச் சட்டங்களை மீறினால், மரண தண்டனை அல்லது 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பு… சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது!
இரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் 286-வது பிரிவின் கீழ் “பூமியில் ஊழல்” எனக் கருதப்படுவோர்க்கு மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படவுள்ளது. இந்த விதியின் படி, தங்கள் வீடியோ பதிவுகளை வெளிநாட்டு ஊடகங்களோடு பகிரும் பெண்களுக்கு மற்றும் அமைதியாக தங்கள் எதிர்ப்பை வலியுறுத்திப் போராடும் பெண்கள், சிறுமிகளுக்கு மரண தண்டனை விதிக்க நேரிடும் எனச் சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளது.
இரானிய அதிகாரிகள் இம்மாத தொடக்கத்தில் “கற்பு மற்றும் ஹிஜாப் கலாசாரத்தை” ஊக்குவித்து புதிய அறநெறிச் சட்டங்களை அறிமுகம் செய்தனர். இச்சட்டத்தின் பிரிவு 37ன் படி, “நிர்வாணம், அநாகரிகமான மற்றும் முறையற்ற ஆடைகளை அணிந்து பிடிபடுவோர்க்கு” கடுமையான தண்டனைகளை அரசு விதிக்கிறது. தண்டனையாக £12,500 வரை அபராதம், கசையடி மற்றும் சிறைத் தண்டனைகளை விதிக்கிறது. மீண்டும் மீண்டும் குற்றத்தைச் செய்வோர்க்கு £15,700 வரை அபராதம், கசையடி அல்லது ஐந்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
புதிய சட்டத்தின் 60வது பிரிவின் படி, “கட்டாயமாக முக்காடு போடுவதை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளைக் கைது செய்ய அல்லது துன்புறுத்துவதைத் தடுக்க முயற்சிக்கும் எவருக்கும் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க நேரிடும்.”

