மகாராஷ்டிர அமைச்சரவை பகிர்மானத்தில் முடிவு எட்டியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், அமைச்சரவைப் பகிர்வு இழுபறியாகவே இருந்து வருகிறது. இறுதியாக, அமைச்சரவைப் பகிர்வில் தீர்வு எட்டியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இதன்படி, முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார் இடையிலான (டிச. 10) சந்திப்பில் முக்கியமான துறைகளான உள்துறை, வருவாய் உள்ளிட்ட 22 துறைகளை பாஜகவும், நகர்ப்புற வளர்ச்சித் துறை உள்பட 11 துறைகளை சிவசேனையும், அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு 10 துறைகளும் பிரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர வீட்டுவசதி, நீர்வளத் துறைகளையும் பாஜக மேற்கொள்ளும் என்றும் பாஜக வட்டாரத்தில் கூறுகின்றனர். மேலும், பதவிகளைவிட உரிமை கோருபவர்களின் எண்ணிக்கை அதிகமிருப்பதால், நியமனங்களை தீர்மானிக்க கட்சிகள் சிரமப்படுகின்றன. நியமனங்கள் தொடர்பாக சிவசேனை கட்சியினுள் மோதல்களை எதிர்கொள்கிறது. விவசாயம், பொதுப்பணித் துறைகளுக்கு இரு கட்சிகள் போட்டி போடுவதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி, கடந்த அமைச்சரவையில் கறைபடிந்த அமைச்சர்களை நீக்குமாறு பாஜக வலியுறுத்தியது; ஆனால், அது கடினம் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

