அதானி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து பாஜகவினருக்கு ரோஜா, தேசியக் கொடி வழங்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், அதானி மீதான அமெரிக்க நீதித்துறையின் லஞ்ச குற்றச்சாட்டு குறித்து அவையில் விவாதிக்கவும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரியும் எதிர்க்கட்சிகள் முழக்கமிடும் நிலையில், அதற்கு அவைத் தலைவர் மறுப்பதால் அதனைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
அதேபோன்று, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக எதிா்க்கட்சிகள் தங்கள் எதிா்ப்பை பதிவு செய்து வருகின்றன.
நேற்று மோடி, அதானி கேலிச் சித்திரங்கள் இடம்பெற்ற கறுப்பு நிறப் பையுடன் தா்னாவில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களுக்கு ரோஜா, தேசியக்கொடி வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

