கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு உலகமெங்கும் விமானத்தில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை உறுதிபடுத்தும் வகையில் தற்போது இருப்பதை விட இன்னும் அதிகமான இந்திய பயணிகளை ஆஸ்திரேலியா நாட்டிற்கு எளிதாக பயணம் செய்யும் நோக்கில் ஆஸ்திரேலியா சுற்றுலா துறையும் ஏர் இந்தியா விமான நிறுவனமும் இணைந்து புதிய மூன்றாண்டு சந்தைப்படுத்தல் கூட்டாண்மையில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் ஏர் இந்தியாவின் வளர்ந்து வரும் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதோடு, தற்போதைய விமான சந்தையில் அதன் இருப்பை அதிகரிக்க உதவுகிறது. ஏனெனில் ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியாவில் இருந்து அதிகமான பார்வையாளர்களை ஈர்க்க முடிவு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரண்டு அமைப்புகளும் இணைந்து ஆஸ்திரேலியாவின் சுற்றுலாத் தலங்களை முன்னிலைப்படுத்தவும், இந்திய சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கவும் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களில் இணைந்து செயல்படும். சமீப காலமாக ஆஸ்திரேலியாவிற்கு இந்திய பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதை தக்கவைக்கும் பொருட்டும், எதிர்கால வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதையும் இந்தக் கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியா சுற்றுலா துறையின் நிர்வாக இயக்குநர் பிலிபா ஹாரிசன் கூறுகையில், “ஏர் இந்தியாவுடனான சுற்றுலா ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும், ஆஸ்திரேலியாவில் விடுமுறையை சந்தோஷமாக கொண்டாட திட்டமிடுவதற்கும் முன்பதிவு செய்வதற்கும் இந்தியப் பயணிகளை ஊக்குவிக்கும் புதிய வழிகளை ஆராய்வதற்கும் எங்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது” என்று உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார்.
ஆஸ்திரேலியா சுற்றுலா துறையின் கிழக்கு சந்தைகள் மற்றும் விமானப் போக்குவரத்துக்கான நிர்வாக பொது மேலாளர் ஆண்ட்ரூ ஹாக் கூறுகையில், “இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். அதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பயண அனுபவங்கள் மற்றும் இணைப்பை மேம்படுத்துவதிலும் மும்மிரமாக செயல்பட்டு வருகிறோம்” என்றார்.
ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன், இந்த ஒத்துழைப்பைப் பற்றி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்: “நாங்கள் உலகம் முழுவதும் எங்கள் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி வரும் வேளையில், ஆஸ்திரேலியாவிலும் எங்கள் இருப்பை இன்னும் அதிகமாக்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளோம்” என்று பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க:
கங்குவா படத்தின் கதாநாயகிக்கு இப்படி ஒரு சோதனையா? – தந்தை கொடுத்த பரபரப்பு புகார்
தற்போது ஏர் இந்தியா விமான நிறுவனம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே வாராம் தோறும் 17 நேரடி விமானங்களை இயக்கி வருகிறது. ஆகஸ்ட் 2024 வரையிலான ஆண்டில், ஏர் இந்தியா விமான நிறுவனம் 1,70,000 இந்தியப் பயணிகளை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. இதன் மூலம் 18.5 சதவீத சந்தைப் பங்களிப்பைப் பெற்றுள்ளதோடு மட்டுமின்றி இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பயணத்திற்கான முக்கிய விமான நிறுவனமாகவும் அதன் நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது ஏர் இந்தியா.
.
&w=750&resize=750,375&ssl=1)
