பாபா சித்திக்கை சுட்டுக் கொன்ற மூவரில் முக்கிய குற்றவாளியான ஷிவ்குமாரை மும்பை சிறப்புப் பிரிவு காவல் துறையினர் இன்று (நவ. 10) கைது செய்தனர்.
பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட நள்ளிரவிலிருந்து ஷிவ்குமார் தலைமறைவாக இருந்துவந்தார். அவரை உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் அருகே காவல் துறையினர் கைது செய்தனர்.
தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் (66) மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள கேர் நகரில் அவரது எம்எல்ஏ மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு அக். 12 ஆம் தேதி இரவு மூன்று நபர்களால் வழிமறித்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர், ஹரியாணாவைச் சேர்ந்த குர்மாயில் குர்மில் சிங் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் சிங் காஷ்யப் ஆகிய இருவரைக் கைது செய்தது.
இதனைத் தொடர்ந்து, ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் மற்றும் கர்ஜத் ஆகிய இடங்களில் குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

