உலகில் வேலைவாய்ப்பு அதிகம் மற்றும் குறைவாக உள்ள டாப் 10 நாடுகள் குறித்த விபரங்களை சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) வெளியிட்டுள்ளது.
உலகில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு என்பது அத்தியாவசிய தேவையாக அமைந்துள்ளது. இதன் மூலம் ஒருவர் பெறும் வருமானத்தை வைத்துக் கொண்டு தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் தேவையான வாழ்வாதாரத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
உணவு, உடை, இருப்பிடங்களைப் போன்று வேலை வாய்ப்பும் ஒரு முக்கிய தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு நாடும் அதன் குடிமக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி, அவர்களை வாழ்வில் முன்னேற்றம் அடைய செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்காக சர்வதேச தொழிலாளர் அமைப்பும் தன்னால் முடிந்த உதவிகளை வழங்குகிறது. மிகவும் வளர்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்காவில் கூட வேலை வாய்ப்பின்மை பிரச்னைகள் அதிகளவு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாதம் சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், உலகில் வேலைவாய்ப்பு அதிகம் மற்றும் மிக குறைவாக உள்ள நாடுகள் எவை என்பது தெரியவந்துள்ளது.
வேலை வாய்ப்பு அதிகம் உள்ள நாடுகளில் கத்தார் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இங்கு வேலை வாய்ப்பு மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது 88.80 சதவீதம் ஆக உள்ளது. வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கு கத்தார் நாடு முதல் தேர்வாக இருந்து வருவது கவனிக்கத்தக்கது.
2 ஆம் இடத்தில் மடகாஸ்கர் தீவும், 3 ஆம் இடத்தில் சாலமன் தீவுகளும் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் ஐக்கிய அரபு அமீரகம், தான்சானியா, புருண்டி, எத்தியோப்பியா, மொசாம்பிக், கம்போடியா, லைபீரியா நாடுகள் உள்ளன.
இந்த தகவல் ஒருநாட்டில் உள்ள வேலை வாய்ப்புகளின் அடிப்படையில் பெறப்பட்டவை. இருப்பினும் இவற்றை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட முடியாது. இந்த தகவல்கள் உள்ளூர் குடிமக்களுக்கு உள்ளூரில் உள்ள வேலை வாய்ப்பினை குறிக்கிறது.
வேலைவாய்ப்பு மிகவும் குறைவான நாடுகளில் ஆப்பிரிக்க நாடான டிஜிபோதி 23.70 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஏமன், சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஜோர்டான், சிரியா, பாலஸ்தீன், ஈராக், நேபாளம், மவுரிஷானியா நாடுகள் உள்ளன.
இந்தியாவின் நிலை என்ன?
சர்வதேச அளவில் 5 ஆவது மிகப்பெரும் பொருளாதார சக்தியாக இந்தியா மாறியுள்ளது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.94 ட்ரில்லியன் டாலரை நடப்பு ஆண்டில் எட்டியுள்ளது.
மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேலைவாய்ப்பு சதவீதம் 52.8 ஆக உள்ளது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவிக்கிறது. Labour Force Survey என்ற இதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் வேலை வாய்ப்பின்மை 10.2 சதவீதம் இருப்பதாகவும், இவர்களில் 11 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், 9.8 சதவீதம் பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை குறைவு என்பது கவனிக்கத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
