தரமான உயர்கல்வியை அனைத்து மாணவர்களும் எளிதில் அணுகக்கூடிய வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா முழுவதும் உள்ள திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரதமர் வித்யாலக்ஷ்மி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பணம் தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் வங்கிகளிடமிருந்து மாணவர்கள் கடன் பெற உத்தரவாதம் ஏதும் அளிக்க தேவை இல்லை. இத்திட்டத்தின் கீழ், சிறந்த 860 தரமான உயர்கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேரும் மாணவர்களுக்கு எளிய முறையில் கல்விக்கடன் வழங்க இது வழிவகை செய்கிறது. மாணவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தில், அவர்கள் வெளிப்படையான மற்றும் முற்றிலும் டிஜிட்டல் விண்ணப்ப செயல்முறை மூலம் கல்விக்கடன் பெறலாம். இதில், 7.5 லட்சம் வரையிலான கடன் தொகைகளுக்கு, இந்திய அரசு 75% கடன் உத்தரவாதத்தை வழங்குகிறது.
Also Read:
கிராமப்புற வங்கிகளை இணைக்கும் மத்திய அரசு… மொத்த எண்ணிக்கையை 28 ஆக குறைக்க நடவடிக்கை
அத்துடன் வங்கிகளும் அதிக நம்பிக்கையுடன் கடன்களை வழங்கும். மேலும், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உயர்கல்வியின் நிதிச் சுமையை குறைக்கும் நோக்கில், ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கான 3% வட்டி மானியம் வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில், அரசு நிறுவனங்களை சேர்ந்த மற்றும் தொழில்நுட்ப அல்லது தொழில்முறைப் படிப்புகளைத் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2024-25 முதல் 2030-31 காலகட்டத்தில் 7 லட்சம் புதிய மாணவர்கள் இந்த வட்டி மானியத்தின் பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் வரை சம்பாதிக்கும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு முழு வட்டி மானியம் வழங்கும் தற்போதைய திட்டங்களின் அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் வித்யாலக்ஷ்மி திட்டம் மூலம், தரமான உயர்கல்வியை உறுதி செய்வதற்கான முயற்சிகளை வலுப்படுத்த அரசாங்கம் முயன்று வருகிறது.
எப்படி விண்ணப்பிப்பது?
‘பிஎம்-வித்யாலக்ஷ்மி’ என்ற ஒருங்கிணைந்த போர்ட்டலில் மாணவர்கள் கல்விக் கடனுக்கும் வட்டி மானியத்திற்கும் விண்ணப்பிக்க முடியும். அனைத்து வங்கிகளும் பயன்படுத்தக்கூடிய எளிமையான விண்ணப்ப செயல்முறை மூலம், ஈ-வவுச்சர் மற்றும் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (CBDC) வாலட்கள் மூலம் வட்டி மானியம் செலுத்தப்படும். நாட்டின் தரமான உயர் கல்வி நிறுவனங்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். 860 தகுதி வாய்ந்த உயர்கல்வி (கியூஎச்இஐ) நிறுவனங்களில் சேரும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள். இந்திய இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வியை இத்திட்டம் உறுதி செய்யும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
