டெலிபோன் சின்னத்துக்கு ஆதரவளித்து விட்டு, அந்த பட்டியலில், புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் கூட்டணி வேட்பாளர்களாக போட்டியிடும், எமது தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு முன்னுரிமையளிக்கும்படி, தமிழ் வாக்களர்களை கோருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
விசேட வாக்காளர் தெளிவூட்டல் அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், சஜித் பிரேமதாசவுக்கு கொழும்பு, கம்பஹா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களில் வெற்றி வாக்குகளை பெற்றுகொடுத்தோம். நுவரெலியா மாவட்டத்தை வென்று கொடுத்தோம். இவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் சாதனை வெற்றிகள்.
ஜனாதிபதி தேர்தலில், சிங்கள வாக்காளர்களின் வாக்குகளை சஜித் பிரேமதாசவுக்கு பெற முடியாத பல பெரும்பான்மை இன அரசியல்வாதிகள், இன்று டெலிபோன் சின்ன வேட்பாளர்களாக, தமிழ் விருப்பு வாக்குகளை தேடி ஓடி வருகிறார்கள். தமிழ் வாக்களர்கள் முன் தோன்றி, தமிழ் மக்கள் மீது திடீர் பாசம் கொண்டு பேசுகிறார்கள். தமிழ் வாக்காளர்களை கண்டு பேசி கட்டியணைக்க முயற்சிக்கிறார்கள்.
எவ்வாறாவது கொஞ்சம் தமிழ் விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டு கரையேற வேண்டும் என நினைக்கின்றார்கள். இது எந்த வகையில் நியாயம்?
தமிழ் மக்கள் துன்பப்படும்போது, துயரப்படும்போது, கண்ணீர்விடும்போது, சிக்கல்களில் சிக்கித் தவிக்கும்போது, அது எமக்கு வலித்தது. தொடர்ந்தும் வலிக்கும். நாதே அவர்களுடன் இருந்தோம். நான்தான் எப்போதும் அங்கே இருந்தேன்.
இன்று தமிழ் விருப்பு வாக்குகளை தேடி வரும் எவரும் அங்கே இருக்கவில்லை. நாளை அடுத்த பாராளுமன்றத்தில், ஜனாதிபதி அநுர நிர்வாகத்துடன் தமிழ் மக்கள் சார்பாக கலந்துரையாடப்போவது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களும், எம்பிக்களுமே. தமிழ் கட்சிகளே. வேறு எவரும் கிடையாது. வேறு எவருக்கும் எம்மீது அக்கறையும் கிடையாது. இதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். தமிழ் வாக்காளர்கள் மீது திடீர் பாசம் காட்டும் இந்த வேட்பாளர்களுக்கு தவறியும் ஆதரவு கொடுத்து விட்டால், களத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் வெற்றியடைய முடியாமல் போய்விடும்.
இந்த சூட்சுமத்தையும், தந்திரத்தையும் தமிழ் வாக்காளர்கள் மிக தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்தார்.
The post டெலிபோன் அணிக்குள் இன்று நிகழும் விருப்பு வாக்கு போட்டி appeared first on Thinakaran.
