அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்புக்கு கண்மூடித்தனமாக ஆதரவளித்து வருகிறார் எலான் மஸ்க்… இதற்கான காரணம் என்ன என்று இந்தத் தொகுப்பில் காணலாம்.
உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். உலகமே உற்று கவனித்து வரும் இந்தத் தேர்தலில் கமலா, ட்ரம்ப் ஆகிய இருவருக்கும் ஆதரவாக ஏராளமான பிரபலங்கள் களமிறங்கி வாக்கு சேகரித்தனர். கமலாவுக்கு ஆதரவாக பிரபல பாப் இசைக் கலைஞர் டெய்லர் ஸ்விஃப்ட், நடிகர் ஜார்ஜ் க்ளூனி, பாப் கலைஞர் எமினெம், பியோன்ஸே உள்ளிட்ட பல பிரபலங்கள் தீவிர பரப்புரை செய்தனர்.
அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக களமிறங்கும் டொனால்டு ட்ரம்பின் பக்கம் பெரிய அளவு பிரபலங்கள் யாரும் இல்லை என்றாலும், உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் தீவிரமாக ஆதரித்து வருகிறார். ட்ரம்ப் வெற்றி பெற்றால் மட்டுமே அமெரிக்கா முன்னேறும் என மஸ்க் கூறினார்.
டிரம்புக்கு ஆதரவாக தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 10 ட்வீட்களையாவது பதிவிட்டார். அவற்றில் பெரும்பாலானவை கமலா ஹாரிஸை கிண்டலடிக்கும் பதிவுகளாக இருந்தன.
டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு முயற்சி நடைபெற்ற போது, “பைடன் அல்லது கமலாவை யாரும் கொலை செய்ய முயற்சிப்பதில்லை” என்று பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார்.
2016 மற்றும் 2020-ஆம் ஆண்டு தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களாகிய ஹிலாரி கிளிண்டனையும் ஜோ பைடனையும் ஆதரித்த எலான் மஸ்க், திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.
ட்ரம்புக்கு ஆதரவாக PAC எனப்படும் அமெரிக்க அரசியல் நடவடிக்கைக் குழுவைத் தொடங்க மஸ்க் 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளார்.
ட்ரம்புக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள டெக்சாசிலிருந்து தனது இருப்பிடத்தை தற்காலிகமாக பென்சில்வேனியாவுக்கு மாற்றினார். அங்கு பட்லர் நகரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் ட்ரம்ப்புடன் பங்கேற்றார். இதே இடத்தில்தான் ட்ரம்ப் மீதான கொலை முயற்சி நடத்தப்பட்டது.
“இந்த தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறாவிட்டால், அதுதான் அமெரிக்காவில் நடக்கும் கடைசி தேர்தலாக இருக்கும்” என்று கூறி மக்களிடையே அச்ச உணர்வையும் எலான் மஸ்க் ஏற்படுத்தினார்.
Also Read |
இந்தியாவிலேயே மிகவும் ஏழ்மையான மாநிலம் எது தெரியுமா..? தமிழ்நாட்டுக்கு இத்தனையாவது இடமா!
தான் மீண்டும் அதிபர் ஆனால் அரசின் நிதி மற்றும் செயல்திறன் தணிக்கை மற்றும் கடுமையான சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு மஸ்க் தலைமையில் பணிக்குழு அமைக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதன்மூலம், மிகப்பெரிய வரிக் குறைப்பு ஆதாயங்களை மஸ்க் பெறுவார் என்றும், ட்ரம்ப்-க்கு எலான் மஸ்க் கண்மூடித்தனமான ஆதரவளிக்க இதுவும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் தற்போதைய பைடன் அரசு, விண்வெளி ஆய்வு விவகாரத்தில் கடுமையான சட்டங்களை விதிப்பதாகச் சாடிவருகிறார். இதன் காரணமாக, தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதுமையான கண்டுபிடிப்புகளைக் கொண்டுவர முடிவதில்லை எனக் குற்றம்சாட்டி வருகிறார்.
கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் இதே கொள்கையைத்தான் பின்பற்றுவார் என்பதால் மஸ்க் ட்ரம்ப் பக்கம் சாய்ந்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
