ஆந்திரப்பிரதேசத்தின் ருஷிகொண்டாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்ட சொகுசு மாளிகை மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு பேரழிவு என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.
இந்த ஆடம்பர மாளிகை, ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா மலைக்கு கீழே அமைந்துள்ளது. இது கடற்கரையோரம் 9.88 ஏக்கரில் முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கான இந்த சொகுசு மாளிகையை, 500 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டு, அதன் ஒட்டுமொத்த செலவு 680 கோடி ரூபாயாக அதிகரித்தது.
பொதுமக்களோ, செய்தியாளர்களோ அனுமதிக்கப்படாத நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்ததை அடுத்து, இந்த கட்டடத்தை தெலுங்குதேசம் எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான காண்டா சீனிவாச ராவ், கடந்த ஜூன் மாதத்தில் பார்வையிட்டார்.
அப்போதுதான், 5 நட்சத்திர விடுதிக்கும் மேலான வசதிகளுடன் கூடிய சொகுசு மாளிகையின் காட்சிகள் வெளியாகின. தலா 15 லட்சம் ரூபாய் செலவுடன் 200 சரவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 33 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு, இறக்குமதி செய்யப்பட்ட மேஜைகள், அழகு மையம், தலா 15 லட்சம் ரூபாய் செலவில் விசாலமான கழிவறைகள் இடம்பெற்றுள்ளன.
7 கட்டடங்களைக் கொண்டதாக இது அமைந்துள்ளது. அதிநவீன ஒலி அமைப்பு முறை, அற்புதமான திரையரங்கு கூடம், பல நிறங்களில் அலங்கார விளக்குகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதன் முன்வளாகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தாவரங்கள், புற்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. இந்த சொகுசு மாளிகைக்கு பலத்த காவல் துறை பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
ஏற்கனவே ஆந்திரப்பிரதேச சுற்றுலா வளர்ச்சி கழகம் நடத்திவந்த சுற்றுலா பயணிகள் தங்குமிடத்தை இடித்துவிட்டு, இந்தப் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த மாளிகை கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீடு மற்றும் முகாம் அலுவலகமாக இது பயன்படுத்தப்படும் என்று அப்போதைய சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா தெரிவித்தார். விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இதனைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ரிஷிகொண்டா மாளிகையை பார்வையிட்ட முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சொகுசு வசதிகள் என்ற பெயரில் சுற்றுச்சூழலுக்கு கடும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
“பழங்கால மன்னர்கள்கூட இதுபோன்ற கட்டடத்தைக் கட்டியதில்லை” என்றும், “இதுபோன்ற கட்டடங்கள், கடற்கரையின் தனித்துவமான அழகைக் கெடுத்துவிடும்” என்றும் விமர்சித்தார். பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு, ஏராளமான தலைவர்களைச் சந்தித்துள்ளதாகவும், ஆனால், மக்களின் நிதியில் இதுபோன்ற கட்டடத்தை யாரும் கட்டியதில்லை என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இதனைப் பார்வையிட பொதுமக்கள் விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள் :
டிரம்ப், ஹாரிஸ்.. யார் வென்றால் இந்தியாவுக்கு நன்மை!
சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் குடிவாடா அமர்நாத், “ஜெகன்மோகன் ரெட்டிக்காக இந்தக் கட்டடத்தைக் கட்டியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த சந்திரபாபு நாயுடு முயற்சிப்பதாக” குற்றம்சாட்டினார்.
விவிஐபி-க்கள் தங்குவதற்கு விசாகப்பட்டினத்தில் போதிய வசதிகள் இல்லை என்றும், கட்டடங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து சந்திரபாபு நாயுடு சிந்திக்க வேண்டும் என்றும் குடிவாடா கேட்டுக் கொண்டார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
