சமீப நாட்களாக, பல ரயில் பயணிகள் ரயில்களின் மோசமான நிலையைக் காட்ட, அதை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர். முக்கியமாக கூட்ட நெரிசல் மற்றும் டிக்கெட் இல்லாத பயணிகள் கூட இருக்கைகளை ஆக்கிரமிப்பது போன்றவை ரயில் பயணத்தை மோசமாக்கியுள்ளன. இந்நிலையில் இந்திய ரயிலில் உள்ள கழிவறையின் நிலையை வெளிநாட்டவர் ஒருவர் வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை இரினா மோரேனோ என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ரயில் கழிப்பறையின் நிலையையும், சரியான சுத்தமின்மையையும் இந்த வீடியோ நமக்கு படம்பிடித்து காட்டுகிறது. பதிவின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ரயில் எண்ணை வைத்து பார்த்தால், இந்த வெளிநாட்டவர் உதய்பூர் சிட்டி – ஜெய்ப்பூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் பயணம் செய்தபோது வீடியோ எடுத்துள்ளார்.
“இந்திய ரயிலின் 2-ம் வகுப்பு வெஸ்டர்ன் கழிப்பறை இது. ரயில் எண்: 12991” என இந்த வீடியோவிற்கு தலைப்பிட்டு மோரேனோ பதிவேற்றியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தான் இந்த வீடியோவை மோரேனோ பகிர்ந்துள்ளார். அதற்குள்ளாகவே 52,000-க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் 5.8 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. அதோடு மட்டுமின்றி இந்த பதிவு பல எதிர்வினைகளையும் கிளப்பியுள்ளது.
“நீங்கள் இரண்டாவது வகுப்பில் பயணம் செய்கிறீர்கள். இது குறைவான வசதிகளே கிடைக்கும் ஒன்றாகும். உண்மையான தரத்தைப் படம்பிடிக்க வேண்டுமென்றால், முதல் வகுப்பில் பயணிக்க நான் உங்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன்” என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
“பெரிய நாடுகளில் சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளன. பட்ஜெட் உணர்வுள்ள பயணத்திற்கு கவனமாக திட்டமிடல் தேவை. விலை குறைவாக இருக்கும் என்றுதான் இந்த ரயிலை நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள். வந்தே பாரத் மற்றும் மெட்ரோ ரயில்கள் போன்ற வசதிமிக்க ரயில்களும் எங்களிடம் உள்ளன. கலாச்சார மற்றும் மரியாதை உணர்வுடன் பயணம் செய்யுங்கள்” என்று மற்றொருவர் அறிவுரை கூறியுள்ளார்.
“இது இரண்டாம் வகுப்பு டிக்கெட். உதய்பூரிலிருந்து ஜெய்ப்பூருக்கு பயணம் செய்ய தோராயமாக 2 அமெரிக்க டாலர்கள் ஆகும்! அந்த விலையில் உங்களுக்கு பீட்சா கூட கிடைக்காது. இந்திய நடுத்தர வர்க்கத்தினர் கூட இந்த வகுப்பில் பயணம் செய்வதை தவிர்க்கிறார்கள். உங்கள் பட்ஜெட்டை அதிகரித்து, சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்கும் ரயிலில் இனி பாதுகாப்பாக பயணிக்கவும்” என்றும் “அடுத்த முறை நல்ல பட்ஜெட்டில் இந்தியாவுக்கு வாருங்கள். அப்போதுதான் வந்தே பாரத் போன்ற சிறந்த ரயில்களில் நீங்கள் பயணிக்க முடியும்” என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் :
தீபாவளி கொண்டாட்டம்… கிழக்கு லடாக்கில் இனிப்புகளை பகிர்ந்து கொண்ட இந்திய – சீன ராணுவ வீரர்கள்!
இதற்கிடையில் மற்றொரு பதிவில், முதல் வகுப்பு இந்திய ரயிலின் மற்றொரு கழிவறை வீடியோவை மோரேனோ பகிர்ந்துள்ளார். “இந்திய ரயிலின் முதல் வகுப்பில் இருக்கும் ஒரு வெஸ்டர்ன் டாய்லெட். ரயில் எண்: 12413” என்று அவர் இந்தப் பதிவின் தலைப்பில் எழுதியுள்ளார். இந்த வீடியோ தற்போது வரை 1,500-க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் 195,000 பார்வைகளையும் பெற்றுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
