இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க பெருவாரியான வாக்குகளை பெற்றுள்ளதால், அவர் அதிபராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. முதல் இடதுசாரி அதிபராக தேர்வாக இருக்கிறார் ஏகேடி? யார் இந்த ஏகேடி? நடப்பு அதிபரை 3ஆம் இடத்துக்கு தள்ளும் அளவுக்கு அவர் செய்தது என்ன? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
இலங்கையில் அடிப்படையில் ஒரு மாற்றம் தேவை என்றும் ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட அம்சங்களையும் முன்வைத்தவர் தான் இந்த ஏகேடி எனப்படும் அனுர குமார திசநாயக்க. அனுராதபுரத்தில் 1968-ல் எளிய குடும்பத்தில் பிறந்த இவர், பின்னாளில் மார்க்சிய, லெனினிச சிந்தாந்தங்களில் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
அப்பா கூலித் தொழிலாளி, அம்மா இல்லத்தரசி மற்றும் ஒரு சகோதரி அவ்வளவுதான் ஏகேடியின் பின்னணி. 1987ஆம் ஆண்டு முதல் இவர் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். ஜனதா விமுக்தி பெருமுன்னா கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அந்த கட்சியில் இணைந்தார். தற்போது அதன் தலைவராகவும் இருக்கிறார்.
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெறும் 3.16% வாக்குகளைப் பெற்று எம்பியாக இருந்துள்ளார்.
பொதுவாக இலங்கையில் கடந்த முக்கால் நூற்றாண்டாக இரு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வரும் நிலையில், இலங்கை அரசியல் கட்டமைப்பிலேயே அடிப்படை மாற்றம் தேவை என்று முழங்கியவர் ஏகேடி.
கடந்த 2022-ல் இலங்கை மக்கள் கடும் பொருளாதார சிக்கலில் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர். 16 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்களால் மக்கள் விழிபிதுங்கி நின்றனர்.
அப்போது சாதாரண மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்ற முழக்கத்தை அழுத்தமாகச் சொன்னவர் தான் இந்த ஏகேடி. இலங்கை பொதுஜன பெருமுனாவின் மீதான அதிருப்தியை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றபோது ஏகேடிக்கு பெரிய அளவிலான ஆதரவு கிடைத்தது.
இலங்கையில் பொதுத்தேர்தல் அறிவிப்பு வந்ததும் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை உருவாக்கிய அவர், அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார். இந்தாண்டு தேர்தலில் இலங்கையின் தென்பகுதியில் மட்டுமில்லாமல், தமிழர்கள் வசிக்கும் பகுதியிலும் அனுர குமாரவுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
Also Read |
Sri Lanka Election | இலங்கையில் ஆட்சியமைக்கும் இடதுசாரி கூட்டணி… அதிபராகிறார் அனுர குமார திசநாயக்க?!
அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாசாவுக்கு மாற்றாகக் கடும் போட்டியை அளிக்கும் வகையில் ஏகேடிக்கு இந்தாண்டு தேர்தலில் அமைந்தது. இளைஞர்கள், சிங்களர்கள், தமிழர்கள் என அனைத்து தரப்பினரும் முதல் முறையாக மாற்றத்தை நோக்கி தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.
இனப்படுகொலையன்றி, பொதுமக்களுக்கான அரசியல் மற்றும் பொருளாதாரத்தை முன்னிறுத்திக் களம் கண்ட ஏகேடிக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.
.
&w=750&resize=750,375&ssl=1)
