கடந்த 2000-ம் ஆண்டு முதல் சீனா – ஆப்பிரிக்கா இடையிலான ஒத்துழைப்பு அமைப்பின் மூலம், ஆப்பிரிக்க நாடுகளுக்கான கடன், முதலீடு மற்றும் உதவிக்காக பல பில்லியன் டாலர்களை சீனா வாக்குறுதி அளித்துள்ளது. இதில் மேற்கோள் காட்டப்பட்ட 60 பில்லியன் அமெர்க்க டாலர்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பகிர்ந்தளிக்க வேண்டும். அதாவது, 2015 முதல் 2018 வரையிலும், பின்னர் 2018 முதல் 2021 வரையிலும்.
ஆனால், இந்த தொகை பகிர்வில் ஒரு வெளிப்படைத்தன்மை இல்லாதது போல் தோன்றுகிறது. சீனா கொடுத்த வாக்குறுதியின்படி இதுவரை ஆப்பிரிக்க நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்று தெளிவாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதன்மூலம் சீனா தனது வாக்குறுதிகளில் உண்மையாக இல்லை என்பதே நிபுணர்கள் பலரின் கருத்தாக உள்ளது.
சீனா தரப்பில் இருந்து இதுகுறித்து எந்தவொரு அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களும் வெளியிடப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஆப்பிரிக்கா தரப்பிலிருந்து ஒரு வெளிப்படையான நகர்வுக்கான எந்தவொரு அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. சீனா தன்னுடைய அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே வட்டியில்லா கடன்களையும், உதவிகளையும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
ரயில் மற்றும் விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாலங்கள் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப உள்கட்டமைப்பு ஆகியவற்றை நிர்மாணிப்பதில் சீன நிறுவனங்கள் ஆப்பிரிக்க அரசாங்கங்களுடன் ஒத்துழைத்து வருகின்றன. எனினும், இவை சீனா மற்றும் தனித்தனி ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உடன்பாடுகள் அடிப்படையில் உருவானவை ஆகும். ஒரு கூட்டு வியூகத்தை தாண்டி இந்த தனித்தனி ஒப்பந்தங்கள் சீனாவின் தரப்புக்கு அதிக அதிகாரத்தை வழங்குகிறது.

