கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில், பாலிமர் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான், தனது கரன்சி தொடர்பாக முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதில், காகித ரூபாய் நோட்டுகளை பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
இது இந்தியாவின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது சற்று வித்தியாசமாக செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், இந்த நடவடிக்கைக்கு தயாராக மக்களுக்கு அந்நாட்டு அரசு போதிய அவகாசம் அளிக்கும் வகையில் முன்கூட்டியே தெரிவித்துள்ளது.
Also read:
மக்களே அலர்ட்! வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
காகித கரன்சிக்கு பதில் புதிய பிளாஸ்டிக் நோட்டுகள்
ஏற்கனவே புழக்கத்தில் உள்ள அனைத்து காகித கரன்சிகளும் டிசம்பர் மாதத்திற்குள் பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றப்படும் என ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் கவர்னர் ஜமீல் அகமது அறிவித்துள்ளார். கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகளை போலியாக மாற்றுவது கடினம். காகித ரூபாய் நோட்டுகளுடன் ஒப்பிடும்போது பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகள் மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது.
மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் மறுவடிவமைப்பு
ஹாலோகிராம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகள் மறுவடிவமைப்பு செய்யப்படும் என ஜமீல் அகமது செனட் குழுவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதிய நோட்டுகள் ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.5,000 ஆகிய மதிப்புகளில் வெளியிடப்படும்.
பழைய நோட்டுகள் ஐந்து ஆண்டுகளுக்கு புழக்கத்தில் இருக்கும். இந்த காலகட்டத்தில் மத்திய வங்கி அவற்றை சந்தையில் இருந்து படிப்படியாக அகற்றிவிடும். முதலில் ஏதேனும் ஒரு மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் சந்தையில் விடப்படும்.
பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தும் நாடுகள்
தற்போது பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை 40 நாடுகள் பயன்படுத்தி வருகிறது. 1998ஆம் ஆண்டில், முதன்முதலில் ஆஸ்திரேலியாதான் பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இந்த நோட்டுகள் நீடித்த தன்மை கொண்டதாகவும், கள்ளநோட்டு புழக்கத்தையும் தடுக்கிறது.
ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் தற்போது இந்த பாலிமர் நோட்டுகளை பரிசோதித்து வருகிறது. மேலும் பொதுமக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால், அனைத்து நோட்டுகளும் பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளாக தயாரிக்கப்படும்.
ரூ.5,000 நோட்டு சர்ச்சை
இதற்கிடையே, பாகிஸ்தானில் ரூ.5,000 நோட்டு வெளியிடுவதற்கு ஒருபுறம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏனென்றால் இந்த உயர் மதிப்பு நோட்டு ஊழலை எளிதாக்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், ரூ.5,000 நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்று ஆளுநர் ஜமீல் அகமது உறுதிப்படுத்தி உள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
