வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்க உள்ள முகமது யூனுஸ் யார் என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பதவி விலகியதால், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் முகம்மது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் நகைக்கடைக்காரின் மகனாக பிறந்தவர் முகமது யூனுஸ். அமெரிக்காவின் புகழ்பெற்ற வாண்டர்பில்ட் பல்கலைகழத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
இதையும் படிக்க:
வங்கதேசம் மாணவர் போராட்டம் வெடித்தது எப்படி? ஷேக் ஹசீனா அவசர அவசரமாக வெளியேறியது ஏன்?
வங்கதேசத்தில் வறுமை தலைவிரித்தாடுவதை கண்ட யூனுஸ், வங்கிக் கடன்களுக்குத் தகுதி பெறாத தொழில்முனைவோருக்கு சிறு கடன்களை வழங்க திட்டம் வகுத்தார். இதனை தொடர்ந்து 1983ஆம் ஆண்டு அவர் தொடங்கியதுதான் கிராம வங்கி என பொருள்படும் கிராமீன் பேங்க்.
இதில், மகளிர் சுய உதவிக் குழுவைப் போன்று செயல்பட்டு பல கோடி பேர் கடன் பெற்று பயனடைந்தனர். பல லட்சம் பேரை வறுமையில் இருந்து மீட்க காரணமானதால் ஏழைகளின் வங்கியாளர் என சர்வதேச அளவில் புகழப்பட்டார். யூனுஸின் இந்த மாடலை தற்போது 100 நாடுகள் பின்பற்றுகின்றன. கிராமீன் பேங்க் இந்திய மதிப்பில் சுமார் ரூ.8000 அளவிலான கடன்களை 9 கோடி ஏழைகளுக்கு வழங்கியுள்ளது.
2006ஆம் ஆண்டு யூனுஸ் மற்றும் கிராமீன் பேங்க்-கிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரது கிராமீன் டெலிகாம் நிறுவனத்தின் பங்களிப்பு காரணமாக 1997 முதல் 2007ஆம் ஆண்டிற்குள் 50 ஆயிரம் கிராமங்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேரின் கைகளில் செல்போனை கொண்டு சேர்த்தார்.
அதேநேரம், தனது தொலைத்தொடர்பு நிறுவனத்தில் 18 கோடி ரூபாயை கையாடல் செய்த புகாரில் இவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொழிலாளர் சட்டத்தை மீறியதாக கடந்த ஜனவரியில் முகமது யூனுஸ்க்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும், ஜாமினில் உள்ளதால் தற்போது அவர் சிறையில் இல்லை. இவர் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்துமே அரசியல் பழிவாங்கும் நோக்கில் புனையப்பட்ட வழக்குகள் என்பது முகமது யூனுஸின் வாதம்.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் எதிரியாக கருதப்பட்டவர் முகமது யூனுஸ். அதிகமான வட்டி வசூலித்து ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியவர் என்று இவரை ஷேக் ஹசினா விமர்சித்துள்ளார். 2013இல் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோதுதான், நோபல் பரிசு பணத்தை அரசிடம் அனுமதி இன்றி முகமது யூனுஸ் பெற்றதாக வழக்கு பதியப்பட்டது.
2007இல் நாகரிக் சக்தி என்ற பெயரில் கட்சி ஒன்றைத் தொடங்க திட்டமிட்ட யூனுஸ், ஹசீனாவின் எதிர்ப்பால், அதனை கைவிட்டார்.
சர்வதேச அளவில் பொருளாதார, வங்கி சார்ந்த பல உயரிய பதவிகளை முகமது யூனுஸ் அலங்கரித்துள்ளார். பாரீசில் நடைபெற்று வரும ஒலிம்பிக் போட்டிகளின் ஆலோசகராகவும், தூதராகவும் செயல்பட்டு வருகிறார் முகமது யூனுஸ்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)