இந்தியாவில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய இருக்கிறார். இதனை முன்னிட்டு நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
476 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், 2023-ம் நிதியாண்டில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதமாக இருந்ததாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக பிற நாடுகளை விட இந்தியா நிலையான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் நாட்டில் மொத்த நிலையான முதலீட்டு கட்டமைப்பு 9 சதகிவிதமாக உள்ளது என்றும், கடந்த 2023 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதமாக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்த நிதியாண்டில், 0.7 சதவிகிதமாக குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க :
Live – இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட் – முக்கிய அம்சங்கள் என்னென்ன?
இந்தியாவின் நிதித் துறைக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளதாகவும், 2024-25 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.5% முதல் 7% வளரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.2 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், 2023-24 நிதியாண்டில் உலகப் பொருளாதாரம் நிலையற்றதாக இருந்தாலும், உள்நாட்டு வளர்ச்சிக் காரணிகள் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாவும், முந்தைய 2022-23 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் சராசரியாக 6.7 சதவிகிதமாக இருந்ததாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பயிர்ச் சேதங்கள் போன்ற பல்வேறு சவால்கள் உணவுப் பொருள்கள், வேளாண் விளைப் பொருட்களுக்கான விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், இதன் காரணமாக உணவுப் பொருட்களின் பணவீக்க விகிதம் 2023 ஆம் நிதியாண்டில் 6.6 சதவீதமாகவும், 2024-ம் நிதியாண்டில் 7.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க :
வருமான வரி செலுத்துபவர்களுக்கு குட்நியூஸ்… பட்ஜெட்டில் வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு!
பொருளாதார ஆய்வறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், இந்திய குடும்பங்கள் பணக்கஷ்டத்தில் இல்லை என்றும், பணத்தை முதலீடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனியார் முதலீடுகள் 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு உயர்ந்து வருகிறது என்றும், விலைவாசி உயர்வை குறிக்கும் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், வளர்ந்த இந்தியா என்ற இலக்கில் கூடுதல் வளர்ச்சிக்கான இடங்களை பொருளாதார ஆய்வறிக்கை கண்டறிந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பொருளாதார பலம் மற்றும் நமது அரசு கொண்டுவந்த பல்வேறு சீர்திருத்தங்களின் விளைவுகள் போன்றவற்றை பொருளாதார ஆய்வறிக்கை மேற்கோள் காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)