மத்திய அரசின் பட்ஜெட்டில் ஆந்திரப்பிரதேசம் மற்றும் பிகாருக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்தியில் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க ஆந்திரப்பிரதேசத்தில் ஆளும் தெலுங்குதேசம், பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இரண்டு மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தன. இதனை மத்திய அரசு நிராகரித்த நிலையில், பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பிகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் மேம்பாட்டுக்காக பூர்வோதயா என்ற திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பிகாரில் சாலை கட்டமைப்புத் திட்டங்களுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, பாட்னா-பூர்ணியா அதிவிரைவு சாலை, பக்சார் – பகல்பூர் அதிவிரைவு சாலை, பக்சாரில் கூடுதலாக இரண்டு வழி மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
மேலும், பிர்பைன்டி பகுதியில் 2 ஆயிரத்து 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் 21 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், விளையாட்டு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசத்தைப் பொருத்தவரை, ஆந்திரப்பிரதேச மறுஅமைப்பு சட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
மாநில தலைநகரின் தேவையை கருத்தில்கொண்டு, நடப்பு நிதியாண்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்பாடு செய்துதரப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.
போலாவரம் நீர்பாசனத் திட்டத்தை விரைந்து முடிக்க தேவையான நிதி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
விசாகப்பட்டினம்- சென்னை தொழில் துறை வழித் தடத்துக்கும், ஹைதராபாத் – பெங்களூரு தொழில் துறை வழித் தடத்துக்கும் நீர், மின்சாரம், ரயில்வே, சாலை திட்டங்களுக்கு தேவையான நிதி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ஆண்டு முதல் கூடுதல் நிதிஒதுக்கீடு செய்யப்படுவதுடன், பின்தங்கிய பகுதிகளான ராயலசீமா, பிரகாசம், வட கடலோர ஆந்திரா பகுதிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
பிகார் மாநிலம் அடிக்கடி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படுவதால், 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வெள்ளம் மற்றும் வேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட அசாம், இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் மாநிலங்களுக்கு தேவையான நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)