இது குறித்து துளசேந்திரபுரம் கிராமத்தினர் தரப்பில் பேசினோம், “இந்தியா வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாலும் பூர்வீக ஊரான துளசேந்திரபுரத்தை மறக்காதவர். எப்போதும் ஊருடன் தொடர்பில் இருப்பவர். அவரது குடும்பத்தினர்களான உறவினர்கள், சென்னை மற்றும் துளசேந்திரபுரத்தில் வசிக்கின்றனர். அவர்கள் மூலமாக ஊர் குறித்த நிகழ்வுகளை கேட்டு தெரிந்து கொள்வார். அவரது குலத்தெய்வமான தர்மசாஸ்தா கோயில் எங்கள் ஊரில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றது இதற்கு கமலா ஹாரிஸ் நன்கொடை வழங்கினார். நன்கொடை வழங்கியவர்களின் பெயர் பட்டியலில் கமலா ஹாரிஸ் பெயர் இடம்பெற்றுள்ளது.
எங்க மண்ணோட தவப்புதல்வி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் கொடுத்திருக்கிறது. இதை வெளிப்படுத்தும் விதமாக ஃப்ளக்ஸ் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளோம். மேலும் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறோம். மன்னார்குடியின் மகள் அமெரிக்க அதிபராவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்கள் எண்ணத்தையும், வேண்டுதலையும் உறவினர்கள் மூலமாக அவருக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். கமலா ஹாரிஸ் அதிபராக வெற்றி பெற்ற பிறகு துளசேந்திரபுரத்திற்கு வந்து மக்களை, உறவுகளை சந்திக்க வேண்டும். உலகமே நிமிர்ந்து பார்க்கும் விருட்சமாக வளர்ந்து இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இதுவே எங்களின் ஆசை, விருப்பம்!”‘ என்றனர் சந்தோஷப் பெருக்கில்.

