அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிட ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
உலகின் மிக வலிமையான ஜனநாயக நாடாக கருதப்படும் அமெரிக்காவின், அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், முக்கிய கட்சிகளான, ஆளும் ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவருக்கு எதிராக குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
81 வயதாகும் ஜோ பைடன், கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின்போது, கால்போன போக்கில் உலாவிய வீடியோ, அவரது வயது மற்றும் மனநிலை குறித்த விவாதத்தை ஏற்படுத்தியது.
இதனால், தேர்தல் பரப்புரையில் ஜோ பைடனின் உடல்நிலை குறித்து ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூன் 27ஆம் தேதி அதிபர் வேட்பாளர்களின் முதல் நேரடி விவாதம், நடைபெற்ற போது, ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. இது அவரது கட்சியினருக்கே சங்கடத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க:
வன்முறையாளர்களை பார்த்தவுடன் சுட உத்தரவு… வங்கதேசத்தில் பரபரப்பு!
ஜூலை 11ஆம் தேதி வாஷிங்டனில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அருகில் நின்று கொண்டே, உக்ரைன் அதிபர் புதின் என மாற்றிக் கூறியதும் சர்ச்சையானது. மற்றொரு முறை, செய்தியாளர் சந்திப்பின்போது துணை அதிபர் கமலா ஹாரிஸ் என்பதற்கு பதிலாக ட்ரம்ப் என்றும் தவறுதலாக ஜோ பைடன் குறிப்பிட்டதும் ஜனநாயக கட்சியினருக்கு கவலையை ஏற்படுத்தியது.
அதிபர் ஜோ பைடனின் தொடர்ச்சியான தடுமாற்றத்திற்கு இடையே, துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் ட்ரம்பிற்கு அனுதாபம் கூடியிருப்பதாக கூறப்படுகிறது.
வயது முதிர்வால் பைடனின் செயல்திறன் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் போட்டியிட வேண்டாம் என்று ஜனநாயக கட்சியினர் கூறி வந்தனர். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும், ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், போட்டியில் இருந்துவிலக மாட்டேன் என கூறி வந்த ஜோ பைடன், திடீரென அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க:
காதில் பேண்டேஜ் அணிந்து டிரம்பிற்கு ஆதரவளிக்கும் மக்கள்!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்த முடிவு குறித்து சில நாட்களில் விரிவாக பேசுவேன் என்றும், எஞ்சி உள்ள தனது பதவிக்காலத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவேன் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜோ பைடனின் இந்த முடிவால், அவரது 50 ஆண்டுகால அரசியல் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் அதிபராக இருப்பவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் இருக்க முடியாது. இதனால், ஒருமுறை அதிபராகிறவர், தொடர்ந்து இரண்டாவது முறைக்கும் போட்டியிடுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், முதல்முறை அதிபரான பைடன், இரண்டாது தேர்தலில் போட்டாமல் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜோ பைடன் விலகியதால், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அதிக வயதான நபராக 78 வயதாகும் டெனால்டு ட்ரம்ப், மாறியுள்ளார்.
அதிபர் தேர்தலில் விலகிய ஜோ பைடன், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசுக்கு தனது முழு ஆதரவை அளிப்பதாக முன்மொழிந்துள்ளார். கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார்.
ஜனநாயக கட்சியின் வேட்பாளர் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர் வேட்பாளார் ட்ரம்ப், தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறுவேன் என தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
