பூமியை நோக்கி எரிகல் ஒன்று வேகமாக வரும் நிலையில், அதனால் பூமிக்கு ஆபத்தா, இதுதொடர்பாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?
நாம் வாழும் பூமி, சூரியக் குடும்பத்தில் இருந்தாலும், அதையும் தாண்டி உள்ள பால்வெளி மண்டலம் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. கோள்கள், துணைக் கோள்களைத் தாண்டி, விதவிதமான வடிவங்களில் எரிகற்களும் பூமியை சுற்றி வலம் வருகின்றன. அதில் சுமார் 4,700 எரிகற்கள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என கண்டறியப்பட்டுள்ளன.
அப்படி ஓர் எரிகல், கடந்த 1908-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் விழுந்தது. 300 அடி அகலமுடைய அந்த எரிகல் ஏற்படுத்திய பாதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல. 100 சதுர கிலோ மீட்டரில் உள்ள பைன் மரக்காடுகள் உள்பட 5 லட்சம் ஏக்கர் பகுதி அப்படியே தரைமட்டமானது.
இந்த நிலையில், மீண்டும் ஓர் எரிகல்லை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடந்த 2004-ஆம் ஆண்டு அரிசோனாவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள், பூமிக்கு ஆபத்தை தரும் ஓர் எரிகல், புவியின் சுற்றுவட்டப் பாதைக்கு இணையாக சுற்றி வருவதைக் கண்டறிந்தனர்.
முதலில் “99942” என பெயரிடப்பட்ட அந்த எரிகல், பின்னர், எகிப்து வரலாற்றில் தீமை மற்றும் குழப்பத்தை வெளிப்படுத்திய பேய் பாம்பின் பெயரால் அபோபிஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1,100 அடி, அதாவது 335 மீட்டர் அகலம் மற்றும் எஸ் வடிவம் கொண்ட அந்த எரிகல், லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள மிகப்பெரிய ஜெயின்ட் வீலை விட இரண்டரை மடங்கு பெரியது.
பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தைவிட சற்றே பெரியது.
இந்த அபோபிஸ் எரிகல், 2029-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பூமியை தாக்கும் என முதலில் கணிக்கப்பட்டது. எனினும், தொடர் ஆய்வுகளில், அபோபிஸால் பூமிக்கு பாதிப்பில்லை என நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பிட்ட நாளில் பூமிக்கு அருகில் அதாவது, 20 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என கூறப்படுகிறது.
அப்படி செல்லும் போது, அதனை ஆஸ்திரேலியா, தெற்கு ஆசியா, தெற்கு ஐரோப்பா ஆகிய நாடுகளில் வசிப்போர், வெறுங்கண்ணால் பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2029-ல் பூமிக்கு அருகே வரும் அபோபிஸ், 2036-ல் மீண்டும் அருகே வரும் என நம்பப்படுகிறது. அப்போதும் பூமிக்கு ஆபத்து இல்லை என கூறும் விஞ்ஞானிகள், 2068-ஆம் ஆண்டில் லேசான பாதிப்பு இருக்கலாம் என்கின்றனர்.
மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 80 ஆண்டுகளாக இருக்கும் நிலையில், இந்த தலைமுறைக்கு அபோபிஸால் ஆபத்து இல்லை. எனினும், வருங்கால சந்ததியை கவனத்தில் கொண்டு, அபோபிஸின் பாதையை திருப்பிவிடும் ஆய்வை பல சர்வதேச விண்வெளி ஆய்வு மையங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதில், இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் தன்னை இணைத்துக் கொள்ளும் என்கிறார் அதன் தலைவர் சோம்நாத்.
இதையும் படிங்க:
தனக்கு எதிராக ஈபிஎஸ்-யிடம் புகார்? அதிமுக தொண்டரை ஆபாசமாக திட்டிய செல்லூர் ராஜு..
100 மீட்டர் விட்டமுள்ள ஓர் எரிகல், பூமியை தாக்கினால், இந்தியா காணாமல் போய்விடும், 2 கிலோ மீட்டர் கல் தாக்கினால், உலகமே அழிந்துவிடும். அப்படி அழியாதவாறு, விஞ்ஞானிகள் இந்த பூமி பந்தை பாதுகாப்பார்கள் என நம்புவோம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
