திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தேரிக் காடுகளின் சுற்று வட்டாரங்களிலும், தண்ணீர் குறைவான பகுதிகளிலும் ஆண்டுதோறும் முருங்கை விளைச்சல் அதிகம் காணப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை, பரப்பாடி, இட்டமொழி சுற்றுவட்டாரங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, பிச்சிவிளை, வட்டன்விளை சுற்றுவட்டாரப் பகுதிகள், ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாயர்புரம் பகுதிகளிலும் முருங்கை சாகுபடி அதிகமாக நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு காலத்தில் வாழை சாகுபடி அதிகம் நடந்த ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் வட்டாரங்களில் இப்போது வாழை சாகுபடியை விட முருங்கை சாகுபடி அதிகம் காணப்படுகிறது. இப்பகுதிகளில் மட்டுமே சுமார் 500 ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருவதாக வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முருங்கையைப் பொறுத்தவரை குறைந்த அளவே தண்ணீர் போதுமானது என்பதால், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை குறைவாக உள்ள திசையன்விளை, குட்டம் சுற்றுவட்டாரங்களில் அதிகளவில் முருங்கை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு அக்னி நட்சத்திரக் காலக்கட்டத்தில் மழை ஓரளவுக்குப் பெய்ததால், முருங்கை விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டது. இப்போது மீண்டும் வெயில் கொளுத்தும் நிலையில், முருங்கை மரங்களில் காய்கள் விளைச்சல் சீராக உள்ளது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ முருங்கைக்காய் ரூபாய் 120 முதல் ரூபாய் 140 வரை என இருந்த நிலையில் இம்மாதம் அதிக விளைச்சல் காரணமாக அதன் விலை குறையத் தொடங்கியுள்ளது. தற்போது விளைச்சல் அதிகமுள்ள பகுதிகளில் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 ஆக உள்ளது.
இதையும் படிங்க: முக்கடல் சங்கமிக்கும் அழகை ரசிக்க சூப்பர் ஸ்பாட்… வேற லெவல் வியூவில் கடலை பாருங்க…
முருங்கை காய்களை அட்டைப்பெட்டி பார்சல் அல்லது மூடைகளில் கட்டி விவசாயிகள் ஆம்னி பஸ்கள் மற்றும் சரக்கு லாரிகளில் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். முருங்கைகாய்களை திருநெல்வேலி மற்றும் பாவூர்சத்திரம் சந்தைகளுக்கு மட்டுமின்றி, சென்னை, பெங்களூரு மற்றும் கேரள சந்தைகளுக்கும் முருங்கை பயிரிடுவோர் மூடை, மூடையாக அனுப்பி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமே ஆண்டுதோறும் சுமார் 3 ஆயிரத்து 300 ஏக்கரில் முருங்கை சாகுபடி நடக்கும் நிலையில், சாத்தான்குளம், உடன்குடி வட்டாரங்கள் இவ்வாண்டும் முருங்கை சாகுபடியில் கொழிக்கின்றன. முருங்கை காய்களைப் பறிக்காமல், அப்படியே விட்டுவிட்டு, சிலசமயங்களில் முருங்கை பவுடர் தயாரிப்புக்கும் விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
