இன்றைய காலங்களில் பல்வேறு சுப காரியங்கள், திருமண நிகழ்ச்சிகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் அலுவலகக் கூட்டங்கள் என அனைத்து வகையான நிகழ்வுகளிலும் மலர்களைக் கொண்டு அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மலர்களில் மனமுள்ள மலர்கள் பல இருந்தாலும் இந்த மலர் அலங்காரங்களுக்கான கண்ணைக் கவரும் வகையில் பல வண்ண, வடிவங்களில் பூக்கள் தேவைப்படுகின்றன. அப்படி மலர் அலங்காரங்களில் முக்கிய இடம் வகிப்பது தான் கார்னேஷன் மலர்கள்.
கார்னேஷன் என்பது டினதஸ் இன தாவரமாகும். இந்த மலர் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பல இடங்களில் பயிரிடப்பட்டு வந்தாலும், இதன் தாயகம் குறித்த சரியாக அறிய முடிவதில்லை. இந்த கார்னேஷன் மலர்களின் அழகிய தோற்றத்தாலும் கண்ணைக் கவரும் வண்ணத்தாலும் அலங்காரங்களில் முக்கிய இடம் இதற்குள்ளது.
இதையும் படிங்க: எருமைகளுக்கு உப்பு கலந்த நீர்… படுகர் மக்களின் பாரம்பரிய விழா சம்பிரதாயம்…
பலவகை காய்கறிகள், மலைப்பயிர்கள் சாகுபடியில் முன்னிலை வகிக்கும் நீலகிரி மாவட்டம் அலங்கார மலர்கள் சாகுபடியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கக்குச்சி கிராமம் கலிங்கனட்டி பகுதியில் கூறைகள் அமைத்து கார்னேஷன் மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த கார்னேஷன் மலர் சாகுபடி செய்வதற்கு முதலில் நிலத்தில் மாட்டுச்சாண உரமிட்டு நிலத்தைத் தயார் செய்கின்றனர். அதன் பிறகு பாத்திகள் அமைத்து இதற்கான நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது. கார்னேஷன் நாற்றுகள் பூனாவில் இருந்து வரவழைக்கப்படுகிறது. நிலத்தைத் தயார் செய்தவுடன் இந்த நாற்றுகள் நடவு செய்யப்பட்டுப் பராமரிக்கப்படுகிறது. தேவையான அளவு நீர், உரம், மருந்து இட்டு பராமரிக்கின்றனர்.
இந்த செடியில் பூ பூக்க சுமார் ஆறு மாத காலங்கள் ஆகின்றது. இதன் இரு புறங்களிலும் நைலான் கயிறுகள் கட்டப்பட்டு செடியில் உள்ள பூக்கள் சரியாத வண்ணம் பார்த்துக்கொள்ளப்படுகிறது. ஆறு மாத கால பராமரிப்பிற்குப் பின்னர் இந்த செடிகளில் மலர்கள் பூக்கத் துவங்குகிறது. பல்வேறு நிறங்களிலும் அந்தச் செடியின் தன்மைக்கேற்ப பூ பூக்கிறது.
இதையும் படிங்க: ஹைபிரிட் விதைகளுக்கு இனி டாட்டா… மரபு விவசாயத்தில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு இலவச விதை…
இந்த மலர்களைப் பார்க்கும் பொழுது கண்களைக் கவரும் விதமான நிறங்களில் அழகாகக் காட்சியளிக்கின்றது. ஆறு மாதம் முதல் சுமார் ஒரு வருடம் வரை இந்தச் செடிகளில் தொடர்ந்து பூ பூக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். இந்த கார்நேசன் சாகுபடிக்குத் தோட்டக்கலைத் துறையின் சார்பாக மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முகூர்த்த நாட்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் நல்ல விலை கிடைப்பதாகவும் மற்ற சமயங்களில் சாதாரணமாக விலை கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
காய்கறி சாகுபடியை விட மலர் சாகுபடியில் வேலை ஆட்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. இதனால் செலவும் அதிகமாக ஆகிறது.
இதுகுறித்து விவசாயி பீமன் கூறுகையில், “தற்போது நாங்கள் 7 வண்ணங்களில் கார்னேஷன் மலர்களைச் சாகுபடி செய்து வருகிறோம். முகூர்த்த நாட்களில் விற்பனை சிறப்பாக நடைபெறும் மற்ற நாட்களில் சகஜமாக இருக்கும். இந்த கார்னேஷன் மலர் சாகுபடிக்கு முதலீடு சற்று அதிகமாகவே தேவைப்படுகிறது. அதற்கு ஏற்ப வருமானமும் ஈட்டலாம். ஆறு மாதத்தில் தொடங்கி ஒரு வருடம் வரை பூக்களைப் பறித்துக் கொண்டே இருக்கலாம்.
இதையும் படிங்க: இயற்கை முறையில் காபி கொட்டைகள் சாகுபடி… நீலகிரி காபிக்கு மவுசு கொஞ்சம் ஜாஸ்தி…
நாங்கள் பூக்களைப் பறித்து வைத்து விடுவோம் வியாபாரிகள் எங்கள் பகுதிக்கு வந்து வாங்கி செல்கின்றனர். அவர்கள் பல்வேறு பகுதிக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். தோட்டக்கலைத் துறையின் மூலமாக மானியமும் வழங்கி செயல்முறை விளக்கம் அளிக்கின்றனர்.
நீலகிரி மையப்பகுதியில் அமைந்துள்ளதால் எந்த பகுதியில் மழை பெய்தாலும் எங்களுக்கும் பொழிந்து விடும். வெளிப்பகுதியிலிருந்து பூக்கள் வந்தால் மட்டுமே எங்களுக்கு விற்பனை குறையும். இருப்பினும் நீலகிரியில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் சந்தைகளில் நல்ல மதிப்புள்ளது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
