ஜிம்பாப்வேக்கு எதிரான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
உலக கோப்பையை வென்றதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த அணிக்கு இளம் வீரர் சுப்மன் கில் தலைமை வகித்துள்ளார்.
சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு முழுவதுமாக இளம் வீரர்களை கொண்ட அணியாக ஜிம்பாப்வேயில் இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாத ஜிம்பாப்வேயிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்தது. இந்நிலையில் 2-ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அதே ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதிரடியாக ரன்கள் குவித்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 47 பந்துகளில் 100 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன்களும், ரின்கு சிங் 48 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பவுலர்களின் அபாரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஜிம்பாப்வே அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதிகபட்சமாக அந்த அணியின் வெஸ்லி மத்வேர் 43 ரன்களும், லூக் ஜோங் 33 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார், ஆவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த 3 ஆவது போட்டி புதன் அன்று நடைபெறவுள்ளது. இதுவரை 2 போட்டிகள் நடந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
.
&w=750&resize=750,375&ssl=1)
