கோலாலம்பூர், சௌகிட்டில் உள்ள ஹோட்டலில் இயங்கி வந்த பாஸ்போர்ட் மோசடியில் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பெரிய மோசடியை குடிநுழைவுத் துறை முறியடித்துள்ளது. காலை 8.30 மணிக்கு தொடங்கிய சிறப்பு நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் மாணவர் அனுமதிச்சீட்டில் இருந்த 24 வயதான வங்காளதேசத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவு இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.
விசாரணையின் அடிப்படையில், ஒரு செயல்பாட்டுக் குழு, சந்தேக நபர் இயக்கிய ஹோட்டல் அறையில் சோதனை செய்து ஒரு லேப்டாப் ஒரு பிரிண்டர், 37 வங்காளதேச கடப்பிதழ்கள், இரண்டு இந்திய கடப்பிதழ்கள் மற்றும் 6 இந்தோனேசிய கடப்பிதழ்கள் உட்பட, போலியானவை என்று சந்தேகிக்கப்படும் கடப்பிதழ்கள் போலி கருவிகளை பறிமுதல் செய்தனர்.
பங்களாதேஷ், நேபாளம், இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆவணமற்ற வெளிநாட்டினருக்கு போலி கடப்பிதழ்களை வழங்க கும்பல் தனித்தனியாக செயல்படும். மேலும் கண்காணிப்பு முகவர்களிடமிருந்து ஆவணங்களைப் பெறவும், வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவ பரிசோதனைக்காகவும் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ஒவ்வொரு பாஸ்போர்ட்டிற்கும் RM100 முதல் RM150 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. சந்தேக நபர் ஒரு நாளைக்கு 50 முதல் 100 போலிகளை கடப்பிதழ்களை தயாரித்துள்ளார்.
குடிநுழைவுச் சட்டம் 1959/63, கடவுச்சீட்டுச் சட்டம் 1966 மற்றும் குடிவரவு விதிமுறைகள் 1963 ஆகியவற்றின் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் இப்போது புத்ராஜெயா குடிநுழைவு டிப்போவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேல் விசாரணைக்காக உள்ளூர் ஆடவர் ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


