பேராக் மாநிலத்தில் உள்ள தாப்பாவில் சமூக மையத்தை புதுப்பிக்க 15 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்ய எடுக்கப்பட்ட முடிவு, முற்றிலுமாக மனிதவள மேம்பாட்டுக்கழகமான எச்ஆர்டி கார்ப் வாரியம் எடுத்த முடிவாகும் என்று மனிதவள முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் நேற்று தெரிவித்தார். கற்றல் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக பழங்குடி இன மக்களுக்கு உதவ வேண்டிய அவசியம் அங்கு இருந்தது என்றும் அவர் சொன்னார்.
ஆனால் அந்த மையத்தை எங்கு அமைப்பது? மறுசீரமைப்புச் செய்யும் திட்டம், நிதிச்செலவுகள் ஆகியவை தொடர்பான முடிவுகள் அனைத்தும் முழுமையாக எச்ஆர்டி கார்ப் வாரியத்தால் எடுக்கப்பட்ட முடிவாகும் என்றும் டத்தோஸ்ரீ சரவணன் எஃப்எம்டியிடம் தெரிவித்தார். பழம்குடி இன மக்கள் கற்றுக் கொள்வதற்கும் அவர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஆதரவு தேவைப்பட்டதன் அடிப்படையில்தான் இந்தத் திட்டத்திற்கு தாப்பா தேர்வு செய்யப்பட்டது என்று பொது கணக்காய்வுக்குழுவிடம் எச்ஆர்டி கார்ப் தலைமை நிர்வாக அதிகாரி சாகுல் ஹமிட் ஷெக் டாவுட் கூறியிருந்தார்.
ஆனால் அப்போதைய மனிதவள அமைச்சரின் தொகுதியாக தாப்பா இருந்ததால் அதுவும் அந்த முடிவுக்கு ஒரு காரணமாக இருந்தது என்று விசாரணையின்போது அவர் தெரிவித்திருந்தார். இங்குள்ள பழங்குடி இன மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் இண்டர்நெட் வசதியும் கல்வி கற்றலுக்கான வளமும் போதுமானதாக இல்லை என்பதால் அந்த மையம் மறுசீரமைப்புச் செய்யப்பட்டதாக சாகுல் கூறியிருந்தார். போதுமான நிதி ஒதுக்கீட்டுடன் மற்ற பகுதிகளிலும் எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்களைக் கொண்டுவர பரிசீலிக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


