கோலாலம்பூர்:
‘நிஞ்சா டர்ட்டல் கேங்’ என்றழைக்கப்படும் கடத்தல் கும்பலிடமிருந்து நூற்றுக்கணக்கான ஆமைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
ஏறத்தாழ 400 ஆமைகள் மீட்கப்பட்டதாகவும் அவற்றின் மொத்த மதிப்பு 3.8 மில்லியன் ரிங்கிட் (805,084 அமெரிக்க டாலர்) என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆமைகளை தென்கிழக்காசிய நாடுகளில் விற்பனை செய்ய கடத்தல் கும்பல் முயன்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜூன் 29ஆம் தேதியன்று கடத்தல் கும்பலுக்கு எதிராக மலேசியக் காவல்துறையினரும் வனவிலங்குத் துறை அதிகாரிகளும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில் அந்த ஆமைகள் மீட்கப்பட்டன.
“கடத்தல் கும்பல்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆமைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை கடந்த பத்தாண்டுகளில் இதுவே ஆக அதிகம்,” என்று மலேசியாவின் வனவிலங்கு, தேசிய பூங்காத் துறை தலைமை இயக்குநர் அப்துல் காதர் அபு ஹஷிம் தெரிவித்தார்.
ஆமைகள் இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ், நேப்பாளம் ஆகிய நாடுகளிலிருந்து கடத்தப்பட்டதாக அவர் நம்புகிறார்.
ஆமைகளைக் கடத்த பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் வாகனத்தை அதிகாரிகள் துரத்திப் பிடித்ததாகவும் அந்த வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகவும் அப்துல் காதர் கூறினார்.
அவரிடம் விசாரணை நடத்திய பிறகு கடத்தப்பட்ட ஆமைகள் வைக்கப்பட்டிருந்த இடம் வெளிச்சத்துக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட ஆமைகளில் இந்தியன் ஸ்டார் ஆமைகளும் அடங்கும்.
இந்தியன் ஸ்டார் ஆமைகளை விற்கவும் வாங்கவும் 2019ஆம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது.


