பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 650 உறுப்பினர்களை கொண்ட மக்களவைக்கான தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி அங்கு ஆட்சியில் அமர்ந்துள்ளது. ஆனால், இந்த முறை ஆட்சி மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, தொழிற்கட்சி ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால், எதிர்க்கட்சி ஆட்சியைப் பிடிக்குமா அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மீண்டும் இங்கிலாந்து பிரதமர் பதவியில் அமருவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
4.9 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வாக்குப்பதிவு முடிந்து சில மணி நேரத்திலேயே அறிவிக்கப்பட உள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனிடையே, தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் தொழிற்கட்சி அதிக அளவிலான சிறுபான்மை எம்.பி.க்களை கொண்டிருக்கிறது. அதாவது சுமார் 14% எம்.பி. வேட்பாளர்கள் சிறுபான்மை பின்னணியில் இருந்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த 2019 தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டனர். இம்முறை அதைவிட அதிக அளவிலான இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
கன்சர்வேடிவ் கட்சியின் தற்போதைய எம்.பி.யான அலோக் ஷர்மா மற்றும் தொழிற்கட்சியை சேர்ந்த வீரேந்திர ஷர்மா ஆகியோர் இந்த முறை மீண்டும் போட்டியில் இருக்கின்றனர். அதிக அளவு சீக்கிய வாக்காளர்களைக் கொண்ட தொகுதியில் இந்திய வம்சாவளிகளான சங்கீத் கவுர் பைல் மற்றும் ஜகிந்தர் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல், முக்கியமான பிரிட்டிஷ் இந்திய வேட்பாளர்களில் ஒருவரான பிரஃபுல் நர்குண்ட் தொழிற்கட்சிக்காக இஸ்லிங்க்டன் நார்த் தொகுதியில் போட்டியிடுகிறார். தொழிற்கட்சியின் கோட்டையாக கருதப்படும் ஐஃபோர்ட் சவுத் தொகுதியில், மற்றொரு இந்தியரான ஜஸ் அத்வால் போட்டியிடுகிறார். டெர்பில் சவுத் தொகுதியில் பேக்கி ஷங்கர், சவுதாம்ப்டன் மேற்கில் சத்வீர் கவுர் மற்றும் ஹடர்ஸ்ஃபீல்டில் ஹர்பிரீத் உப்ப ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல், லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் ராஜேஷ் அகர்வால், லெய்செஸ்டர் கிழக்கில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கன்சர்வேடிவ் கட்சி சார்பில் ஷிவானி ராஜா போட்டியிடுகிறார். இதே தொகுதியில் மற்றொரு இந்திய வம்சாவளியான கீத் வாஸும் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
மத்திய இங்கிலாந்தின் வால்மர்ஹாம்ப்டான் வெஸ்ட் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாரிந்தர் ஜஸ் மற்றும் ஸ்மெத்விக் பகுதியைச் சேர்ந்த குரிந்தர் சிங் ஜோசன் ஆகிய இந்திய வம்சாவளிகள் போட்டியில் உள்ளனர். பீகாரில் பிறந்த கனிஷ்க் நாராயண், வேல் ஆஃப் கிளாமோர்கனில் போட்டியிடுகிறார். டட்லி டோரி தொகுதியில் இந்திய பூர்வீகத்தை கொண்ட சோனியா குமார் களத்தில் இருக்கிறார்.
இவ்வாறு தொழிலாளர் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் ஏராளமான இந்திய வம்சாவளிகளை எம்.பி. தேர்தல் களத்தில் இறக்கிவிட்டுள்ளது. இதற்கு இடையே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வடக்கு இங்கிலாந்தில் ரிச்மண்ட் மற்றும் நார்தல்லர்டனில் இருந்து மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரைப் போலவே, தற்போதைய எம்.பி.க்களான பிரிதி படேல், சுயெல்லா பிரேவர்மேன் ஆகியோரும் வெற்றிபெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
