பாரீஸ் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 26 முதல் தொடங்குகிறது. இதற்காக, இந்தியாவில் இருந்து சென்ற வீரர், வீராங்கனைகளுக்கு நேற்று (ஜூன் 30) பிரியா விடை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கான உடைகள் அறிமுகம் செய்யப்பட்டன. அத்துடன், தொடக்க விழா மற்றும் இறுதி விழாவில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கான ஆடைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, முன்னாள் தடகள வீராங்கனையும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவருமான பி.டி.உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மன்சுக் மாண்டவியா, “இந்திய அணி விளையாட்டிலும், இந்தியாவின் வளர்ச்சியை தக்கவைக்கும் என்று நான் நம்புகிறேன். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற நாங்கள், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஏழு பதக்கங்களை வென்றுள்ளோம்.
நீரஜ். சோப்ராவின் தங்கப்பதக்கம் இந்தியாவை 67வது இடத்தில் இருந்து 48வது இடத்திற்கு கொண்டு சென்றது” என்று தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சி உடையை வெளியிடுவது மட்டுமின்றி, விளையாட்டு வீரர்களின் பின்னால் ஒன்றுபட்டிருக்கும் பல கோடி இந்தியர்களின் கனவுகளின் அடையாளம் என்றும் கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா, டாக்டர் டின்ஷா பார்திவாலா தலைமையில் ஒரு வலுவான குழுவை அமைத்திருப்பதாகவும், இதில், விளையாட்டு மருத்துவ நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், பிசியோதெரபிஸ்டுகள் உள்ளிட்ட பலர் இருப்பதாக தெரிவித்தார்.
அத்துடன், “பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 120 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியக் குழுவில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, 16 பேர் கொண்ட ஆண்கள் ஹாக்கி அணி மற்றும் சாதனை 21 துப்பாக்கி சுடும் வீரர்கள் உள்ளனர். முதன்முறையாக, விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மற்றும் துணை ஊழியர்களுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் உதவித்தொகையை வழங்கும். எந்தவொரு ஒலிம்பிக்கிலும் ஒப்பிடும்போது, பாரிஸில் இந்தியா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
