திருநாவுக்கரசு நாயனாரும் பிள்ளையாருக்கு எதிரே வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி, நல்வரவு வினவி மகிழ்ந்தார்கள். அப்போது பிள்ளையார் அப்பமூர்த்தியை நோக்கி, “அப்பரே! நீர் வருநாளிலே திருவாரூரிலே நிகழ்ந்த சிறப்பைச் சொல்லும்” என்று சொல்ல; அப்பமூர்த்தி திருவாதிரைச் சிறப்பைத் திருப்பதிகத்தினாலே சொல்லியருளினார். பிள்ளையார் அது கேட்டு, “நான் திருவாரூருக்குப் போய்ச் சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு மீண்டும் இவ்விடத்திற்கு வந்து உம்முடன் இருப்பேன்” என்று சொல்லியருளினார். அப்பமூர்த்தி திருப்புகலூருக்குப் போக, திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் சென்று, திருவிற்குடி வீரட்டத்தை வணங்கிக் கொண்டு திருவாரூரை அடைந்து, வன்மீகநாதரை வணங்கித் திருப்பதிகம் பாடி, அப்பதியில் எழுந்தருளி யிருந்தார். அங்குள்ள அரநெறியென்னும் ஆலயத்தையும் காலந்தோறும் பணிந்தார். அங்கெழுந்தருளியிருக்குநாளிலே, திருவலிவலம், திருக்கோளிலி முதலிய ஸ்தலங்களுக்கும் போய், சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு மீண்டும் அத்திருவாரூரில் வந்து இருந்தார். சில நாளாயின பின், திருநாவுக்கரசு நாயனாரைக் காணுதற்கு விரும்பி, திருவாருரை நீங்கி, திருப்பனையூரிற்சென்று, சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு, திருப்புகலூருக்குச் சமீபித்து அப்பதியினின்று வந்து தம்மை எதிர்கொண்ட அப்பமூர்த்தி, முருகநாயனார் முதலாகிய திருத்தொண்டர்களோடும் போய் சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு, முருகநாயனாருடைய திருமடத்தை அடைந்து, அங்கே இருந்தருளினார்.
(தொடரும்)
The post மானுடவியல் appeared first on Thinakaran.

