மேற்படிப்பு, வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் செல்கின்றனர். அவ்வாறு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் தெலுங்கு பேசுபவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் சென்சஸ் பியூரோ (US Census Bureau data) வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்த தெலுங்கு பேசக்கூடிய மக்களின் எண்ணிக்கை 3.2 இலட்சம், அதுவே 2024 ஆம் ஆண்டில் நான்கு மடங்கு அதிகரித்து 12.3 இலட்சம் என உயர்ந்துள்ளது.
குறிப்பாக கலிபோர்னியாவில்தான் தெலுங்கு பேசக்கூடிய மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். சுமார் 2 இலட்சம் பேர் கலிபோர்னியாவில் வசிக்கின்றனர். டெக்சாஸில் 1.5 இலட்சம் தெலுங்கு பேசக்கூடிய மக்கள் வசிக்கின்றனர். நியூ ஜெர்சியில் 1.1 இலட்சம் பேர் வசிக்கின்றனர் என புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.
இல்லினாய்ஸ் பகுதியில் 83,000 பேரும்,விர்ஜீனியாவில் 78,000 பேரும், ஜார்ஜியாவில் 52,000 பேரும் தெலுங்கு பேசக்கூடிய மக்களாக இருக்கின்றனர். அனைத்து மாநிலங்களிலும் தெலுங்கு பேசக்கூடிய மக்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது என இந்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் தற்போது பேசப்படும் 350 மொழிகளில் அதிகமானவர்கள் பேசக்கூடிய வெளிநாட்டு மொழிகளின் பட்டியலில் தெலுங்கு 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்காவிற்கு ஆண்டுதோறும் 60,000 முதல் 70,000 மாணவர்கள் செல்கின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் தங்களிடம் பதிவு செய்வதாக வட அமெரிக்காவில் உள்ள தெலுங்கு பேசும் மக்களின் கூட்டமைப்பின் தலைவர் அசோக் கொல்லா தெரிவிக்கிறார்.
அமெரிக்காவுக்கு வருகை தருபவர்களில் 75% பேர் அமெரிக்காவிலேயே நிரந்தரமாகி விடுகின்றனர். இதற்கு முன்பு அமெரிக்காவில் குடிபெயர்ந்த தெலுங்கு பேசும் மக்களில் பெரும்பாலானவர்கள் தொழில் முனைவோர், ஆனால் தற்போது அமெரிக்காவிற்கு வருகின்ற 80 சதவீதம் பேர் இளைஞர்கள். இவர்கள் பெரும்பாலும் ஐடி மற்றும் நிதித்துறைகளில் பணிபுரிவர்களாக இருக்கின்றனர்.
அமெரிக்காவில் அதிகமானவர்கள் பேசும் இந்திய மொழிகளாக இந்தி, குஜராத்தி ஆகியவை இருந்த நிலையில் அந்தப் பட்டியலில் தற்போது தெலுங்கு இடம்பிடித்திருப்பது இந்தப் புள்ளிவிபரங்களில் தெரியவந்திருக்கிறது.
The post அமெரிக்காவில் தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை12.3 இலட்சமாக உயர்வு! appeared first on Thinakaran.

