டி20 உலகக் கோப்பை தொடரில், அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. 2022 ஆம் ஆண்டு அரையிறுதியில் தோற்றதற்கு பழிதீர்த்துள்ளது ரோஹித் சர்மா படை.
டி20 உலகக் கோப்பை தொடரில், மேற்கு இந்திய தீவுகளின் கயானாவில் நடைபெற்ற 2வது அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது இந்தியா. வானிலை முன்னறிவிப்பின்படி மழை கொட்டியதால், ஆட்டம் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச முடிவு செய்தார். அதேநேரத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பேட்டிங் செய்யவே முடிவு செய்ததால், அந்த வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி என்றார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலி இப்போட்டியிலும் 9 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த ரிஷப் பந்தும் 4 ரன்களில் வெளியேறினார். அதேநேரத்தில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 39 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு துணையாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 47 ரன்கள் எடுத்தார். இந்திய அணி விளையாடியபோது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் சிறிதுநேரம் தடைப்பட்டது. எனினும் ஓவர்கள் ஏதும் குறைக்கப்படவில்லை.
ரோஹித்-ஸ்கை கூட்டணிக்கு பிறகு வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் சேர்க்காத நிலையில், இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் கூட்டணியின் சுழலில் சிக்கி சுருண்டது. அதிரடியாக தொடங்கிய ஜாஸ் பட்லர், பேர்ஸ்டோவ், மொயின் அலி ஆகியோரை அடுத்தடுத்து பெவிலியன் அனுப்பிவைத்தார் அக்ஷர் படேல்.
இதையும் படிக்க:
வரலாற்றில் முதல்முறை – உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா அணி..
அவருக்கு துணையாக வீசிய குல்தீப் யாதவ், ஹேரி புரூக், சாம் கரண், கிறிஸ் ஜோர்டன் விக்கெட்களை வீழ்த்தினார். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி வரும் பும்ராவும் 2 விக்கெட்களை வீழ்த்த இங்கிலாந்து 16.4 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்து 68 ரன்களில் தோல்வியடைந்தது. ஹேரி புரூக் எடுத்த 25 ரன்களே அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.
23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்திய அக்ஷர் படேல் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த தொடருக்கு புறப்படுவதற்கு முன்பு ஏன் 4 ஸ்பின்னர்கள் என செய்தியாளர்கள் ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு அவர் மேற்கு இந்திய தீவுகளில் பதில் சொல்லுகிறேன் என தெரிவித்திருந்தார். அதன்படியே ஸ்பின்னர்களை கொண்டு இங்கிலாந்தை பழிதீர்த்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)