திண்டுக்கல் பூட்டு தயாரிப்பிற்கு உலகப் புகழ்பெற்றது. அந்தப் பூட்டிற்கு அடுத்தபடியாக இங்கு பாரம்பரியமாகப் பாதுகாப்பு பெட்டகம் தயாரிப்பு நடைபெறுகிறது. இங்குள்ள தொழிற்பேட்டையில் பல நிறுவனங்கள் இந்த பாதுகாப்பு பெட்டகத் தொழிலில் ஈடுபட்டுள்ளன.
இந்த இரும்பு பெட்டகமானது கோவில்கள், நகைக்கடைகள், அடகுக் கடைகள், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் பெரும்பாலாகப் பயன்படுத்தப்படுகிறது. கோவில்களில் அம்மன் நகைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கும் மற்றும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் போன்ற வடிவிலும் இரும்பு பெட்டகம் செய்யப்படுகின்றன.
திண்டுக்கல்லில் தயாரிக்கப்படும் பெட்டகமானது ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த இரும்பு பெட்டகமானது இரும்புக் கம்பிகள் மற்றும் இரும்புத் தகடுகளைக் கொண்டு செய்யப்படுகின்றன. இங்கு தயாரிக்கும் பெட்டகமானது அவ்வளவு எளிதாக உடைத்து விட முடியாது என்பதால் திண்டுக்கல் பாதுகாப்பு பெட்டகத்திற்கு நல்ல மவுசு உள்ளது.
இதையும் படிங்க: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்னொரு பழனி… இந்தக் கீழ் பழனி கோவிலின் சிறப்புகள் தெரியுமா..?
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில், ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில் போன்ற பல கோவில்களுக்கு திண்டுக்கல்லிலிருந்து தான் உண்டியல் தயாரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பாதுகாப்பு பெட்டகத் தொழிலும் கால மாற்றத்திற்கு உட்பட்டு பல நவீன வசதிகளை உட்புகுத்தியுள்ளது. சாவி போட்டு திறக்கும் பூட்டு மாடல் கொண்ட பாதுகாப்பு பெட்டகங்கள் முதல் நம்பர் லாக், கைரேகை கொண்டு திறக்கும் ஸ்மார்ட் லாக் வரை பல வகை மாடல்களில் இந்த பாதுகாப்பு பெட்டகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
பாரம்பரியமாக திண்டுக்கல்லில் இந்த பாதுகாப்பு பெட்டகத் தயாரிப்பு தொழில் நடைபெற்று வந்தாலும், தற்போதைய காலகட்டத்தில் இந்த தொழிலில் பெரு நிறுவனங்களுடன் இவர்கள் போட்டி போட வேண்டிய சூழல் நிலவுகிறது. மேலும், சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் பாதுகாப்பு பெட்டகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சூழலில் திண்டுக்கல் பாதுகாப்பு பெட்டகங்கள் மக்கள் மத்தியில் தனித்த அபிமானத்தைப் பெற்று விளங்குகின்றன.
இதையும் படிங்க: ஊட்டியின் பெயர் காரணம் தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய வரலாறு…
இதுகுறித்து பாதுகாப்பு பெட்டகத் தயாரிப்பாளர் பிரசாந்த் கூறுகையில், “இங்குத் தயாரிக்கப்படும் பெட்டகமானது மிக உறுதியான இரும்புகளைக் கொண்டே தயாரிக்கப்படுகிறது. மேலும் கைகளால் செய்யப்படும் திண்டுக்கல் பூட்டு கொண்டு இப்பெட்டகம் தயாரிக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு பெட்டகம் தயாரிக்க 4mm முதல் 6mm வரை தடிமன் கொண்ட கடினமான இரும்பினைப் பயன்படுத்துகிறோம். அதனால் இந்த பாதுகாப்பு பெட்டகங்களைச் சுலபமாக யாராலும் உடைக்க முடியாது.
பழைய காலத்துப் பெட்டகம் வகை என்றால் அது செட்டிநாடு பெட்டகமாகும், அந்த செட்டிநாடு பெட்டகத்தில் செய்யப்படும் சாவி மிகச் சிறப்பு வாய்ந்தவை. தற்போது செய்யப்படும் பெட்டகத்தில் அந்த செட்டிநாடு சாவியை யாராலும் கொண்டுவர முடியவில்லை. தற்போது செய்யப்படும் பெட்டகமானது வளர்ப்பு பெட்டகம் என அழைக்கப்படுகிறது, மேலும் மக்களும் இதனை விரும்பி வாங்குகின்றனர்.
பெரும்பாலும் செட்டிநாடு பெட்டகம் என்பது கோவில் உண்டியலுக்குப் பயன்படுத்தப்படும். மேலும் இங்குத் தயாரிக்கும் பெட்டகமானது அந்தமான், லண்டன் போன்ற இடங்களுக்கும் ஏற்றுமதி செய்திருக்கிறோம். வெளிநாடுகளிலிருந்து பெட்டகங்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும், பெரு நிறுவனங்களின் தயாரிப்புகளால் எங்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
இதையும் படிங்க: ‘மேல் பழனி’ தெரியும்…. தமிழ்நாட்டில் ‘கீழ் பழனி’ எங்கிருக்கு தெரியுமா..?
ஏனென்றால் நாங்கள் புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு அமைப்பினைத் தான் பாதுகாப்பு பெட்டகங்களுக்குப் பயன்படுத்துகிறோம். அதனால் ஏனைய நிறுவன தயாரிப்புகளை விட திண்டுக்கல் பெட்டகத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் நாங்கள் வழக்கமான 4 அடி அளவுகளில் பாதுகாப்பு பெட்டகங்களைத் தயாரிக்கிறோம். மேலும், வங்கி, வணிக நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப அவர்களுக்கு வேண்டிய அளவிலும் பாதுகாப்பு பெட்டகங்களை கஸ்டமைஸ் செய்து உருவாக்குகிறோம். மேலும் நாங்கள் உருவாக்கிய பாதுகாப்பு பெட்டகங்களுக்கு தேவையான சர்வீசும் நாங்கள் வழங்குகிறோம். அதனால் எங்கள் பாதுகாப்பு பெட்டகத் தொழில் சீராகவே உள்ளது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
