மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களையும், தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களையும் பெற்றதால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. 234 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சிகளாக மக்களவையில் இந்தியா கூட்டணி அமருகிறது. இந்த சூழலில் 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், மக்களவையின் இடைக்கால சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ள பர்த்ருஹரி மகதாப்-க்கு(Bhartruhari Mahtab) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்லும் பர்த்ருஹரி மகதாப், காலை 11 மணிக்கு மக்களவையை கூட்ட உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் மக்களவைத் தலைவரான பிரதமர் நரேந்திர மோடியை அவையின் உறுப்பினராகப் பதவியேற்க இடைக்கால தலைவர் பர்த்ருஹரி மகதாப் அழைப்பு விடுப்பார். ஆனால், 8 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சுரேஷுக்கு பதிலாக பாஜக எம்.பி. பா்த்ருஹரி மகதாப்-ஐ தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்காலிக சபாநாயகருக்கு உதவும் குழுவில் நியமிக்கப்பட்டதை எதிர்க்கட்சியினர் நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18வது மக்களவை கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்களில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்க உள்ளனர். மக்களவை இடைக்கால தலைவர் பர்த்ருஹரி மகதாப் முன்னிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.
பின்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் 27ஆம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இதனிடையே, புதிய மக்களவைத் தலைவராக தேர்வாகப் போவது யார்? என்ற கேள்வி நீடித்து வருகிறது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுமே மக்களவைத் தலைவர் பதவியை எதிர்பார்ப்பதாக கூறப்படும் நிலையில், அப்பதவியை பாஜக விட்டுக் கொடுக்காது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை ராஜஸ்தான் எம்.பி. ஓம் பிர்லா மக்களவைத் தலைவராக செயல்பட்டார். அவருக்கே பாஜக மீண்டும் வாய்ப்பளிக்குமா? அல்லது பாஜக மூத்த தலைவா்கள் டி.புரந்தரேஸ்வரி, ராதா மோகன் சிங் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்ப வழங்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
