சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளைப் பதிவிட்ட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான ரேணுகாசுவாமியை, நடிகர் தர்ஷன் தூகுதீபா, அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான பவித்ரா கௌடா உள்ளிட்டோர் கடத்திக் கொலை செய்த வழக்கில் நடிகா் தா்ஷன் தூகுதீபாவை ஜூன் 11-ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்ஷனின் மனைவி விஜயலக்ஷ்மிக்கும் அவருக்குமிடையே நடிகை பவித்ரா கௌடா பிரிவை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார் ரேணுகாசுவாமி. மேலும், நடிகையை குறித்து அநாகரிகமான வார்த்தைகளைப் பதிவிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெங்களூரின் சுமனஹள்ளி பகுதியில் கால்வாய் ஒன்றின் அருகே ரேணுகாசுவாமியின் சடலம் சிதைந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதியன்று கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மறுநாள், கடந்த 10-ஆம் தேதி, நடிகர் தர்ஷனுக்கு நெருக்கமானவர்களாக அறியப்படும் ரசிகர் மன்றங்களைச் சார்ந்த கார்த்திக், நிகில் நாயக், கேஷவமூர்த்தி, ரவீசங்கர் ஆகிய நால்வர் ரேணுகாசுவாமியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொலையில் நடிகர் தர்ஷன் தூகுதீபாவும், அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான ப்வித்ரா கௌடாவும் முக்கியக் குற்றவாளிகள் என்ற தகவல் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தர்ஷன், பவித்ரா கௌடா மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 11 பேரும் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜூலை 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 4-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக், நிகில் நாயக், கேஷவமூர்த்தி, ரவிசங்கர் ஆகிய நால்வரையும் துமக்குரு சிறைக்கு மாற்ற நீதிமன்றம் இன்று(ஜூன் 24) உத்தரவிட்டுள்ளது.

