மன்னார் தீவுக்குள் நுழைகின்ற வாயிலில் இருந்த இராணுவ சோதனைச் சாவடி நீக்கப்பட்டுள்ளது.
மன்னார் தீவின் நுழைவாயிலில் நீண்டகாலமாக நிலை கொண்டிருந்த இராணுவ சோதனைச் சாவடியால் பொது மக்கள் பல அசௌரியங்களுக்கு உள்ளாகி வந்திருந்ததுடன் பொழுது போக்கு மற்றும் உடற்பயிற்சியாளர்களுக்கும் பல அசௌரியங்களும் ஏற்பட்டு வந்தன.
இது தொடர்பாக மன்னார் மாவட்டத்தின் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பொது மக்கள் மற்றும் பிரயாணிகளின் நலன்கருதி இந்த தடை முகாமை இவ்விடத்திலிருந்து நீக்குமாறு நீண்டகாலமாக கோரிக்கைகளை முன்வைத்து வந்ததுடன் சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருந்தனர்.
இந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதி மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த பொழுது மன்னார் மாவட்ட விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபொழுது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனால் இந்த சோதனைச் சாவடியை அகற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை (18) பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்ற கட்டடத்தில் ஜனாதிபதியை சந்தித்து இந்த இராணுவ சோதனைச் சாவடி அகற்றல் தொடர்பாக மீண்டும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த இராணுவச் சாவடி நேற்று (21) அகற்றப்பட்டுள்ளது.
அத்துடன் மன்னாரிலிருந்து போதைப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக காரணம் காட்டி இந்த இடத்தில் வாகனங்களில் கொண்டு வரும் பொருட்களை இறக்கி பரிசோதனை செய்யப்பட்டு வந்தமையால் இப்பகுதியில் பொருட்களின் விலைகளும் அதிகரித்து காணப்பட்டு வந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டு வந்ததுடன், மன்னாரிலிருந்து இந்த பாதையினூடாக போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக எவரிலும் சந்தேகம் எற்பட்டால் தள்ளாடி இராணுவ முகாமுக்கு அருகாமையில் வைத்து அவர்களை சோதனை செய்வதில் பிரச்சினையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
(தலைமன்னார் விஷேட நிருபர் – வாஸ் கூஞ்ஞ)


