உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.
சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி வெஸ்ட் இண்டீசின் செயின்ட் வின்சென்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷான்டோ பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து அதிரடியாக ரன்கள் சேர்த்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் ரோஹித் 23, கோலி 37, ரிஷப் பந்த் 36, ஷிவம் துபே 34 ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் ரன்கள் எடுக்க சிரமப்பட்ட விராட் கோலி, 3 சிக்சர்களுடன் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தது இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கின. கேப்டன் ஷான்டோ மட்டும் 32 பந்துகளில் 3 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவர்களில் ரிஷாத் உசைன் அதிரடியாக 3 சிக்சருடன் 24 ரன்கள் சேர்த்தார்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் குரூப் 1 பிரிவில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
