உலகக்கோப்பை டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இந்த சுற்றுக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
நேற்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை தென்னாப்பிரிக்காவும், வெஸ்ட் இண்டீசை இங்கிலாந்து அணியும் வென்றன. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பார்படாஸில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் ஆப்கன் அணி வீரர்களின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் குறைந்த வேகத்தில் இந்திய அணி ரன்களை சேர்த்தது. தொடக்க வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்களும், விராட் கோலி 24 ரன்களும், ரிஷப் பந்த் 20 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தினார். சிவம் துபே 10 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 24 பந்துகளில் 2 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடத் தொடங்கினர்.
இந்திய அணியின் நேர்த்தியான பந்து வீச்சுக்கு முன்னால் ஆப்கன் வீரர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தொடக்க வீரர் குர்பாஸ் 11 ரன்னிலும், ஹஸ்ரதுல்லா 2 ரன்னிலும், இப்ராகிம் சத்ரான் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
குலாப்தீன் நயிப் 17 ரன்னும், அஸ்மதுல்லா ஒமராசி 26 ரன்களும் சேர்க்க, நஜிபுல்லா 19, முகமது நபி 14 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
.
&w=750&resize=750,375&ssl=1)
