சென்னை: ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் பவன் கல்யாண் கட்சி எப்படி வெற்றியை பெற்றது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பவன் கல்யாணின் ஆந்திர அரசியல் வெற்றி எப்படி சாத்தியமானது? அதற்கு முன் சில நிஜங்களை பார்ப்போம்…
கலைக்குள் சாதி வரக்கூடாது என்பது உண்மை தான். அதனால் தான் அந்தக் காலத்தில் மேனனாகிய புரட்சித்தலைவர் தேவரை தயாரிப்பாளராக்கி பணக்காரராக்கினார். மன்றாயராய சிவாஜி பாலாஜி என்கிற மலையாளியை தயாரிப்பாளராக்கினார். சாதி பேதமற்று கலைஞர்கள் இருந்தது அந்தக்காலம். சரி. ஆந்திரத் திரையுலகத்துக்கு வருவோம். ஜூனியர் என்.டி.ஆரின் ஜனதா கேரேஜ் படம் வந்த போது பவன் கல்யாண் ரசிகர் ஒருவரை கொன்று விட்டார் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்.
மோதல் ரசிக மனோபாவத்தால் என்று மேலோட்டமாக தள்ளி விட முடியாது. ஆந்திரத் திரையுலகில் கம்மா – காப்பு சாதியினரின் மறைவு யுத்தம் 50களிலிருந்தே இருக்கிறது. கம்மா அல்லது சௌத்ரி சாதியை சேர்ந்தவர் என்.டி.ஆர். அன்று என்.டி.ஆர் திரையில் கோலோச்சி நடக்க தன் சாதியை பயன்படுத்தியே வந்துள்ளார். காரணம் அப்போது ரெட்டி இனமே திரையுலகில் இயக்குனர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என கை ஓங்கி இருந்துள்ளது.
கம்மாவும், காப்புவும் சிறிய காமெடி ரோல்களே செய்து கொண்டிருந்தனர். என்.டி.ஆர் நாயகனானதும் கம்மாவும், காப்புவும் மேல் சாதிக்கு (ரெட்டிகளல்ல) எதிரான நாயகனாக என்.டி.ஆரை வளர்த்தனர். சிரஞ்சீவி என்கிற நடிகர் வரும் வரை கம்மாவும், காப்புவும் திரையுலகின் உள்ளேயும், வெளியேயும் ஒற்றுமையாக இருந்தனர். என்.டி.ஆர் முதல்வராக காரணமே ரெட்டிகளுக்கு எதிராக என்.டி.ஆர் ஆட்சிக் கட்டிலில் அமரவேண்டும் என்கிற மனநிலையே.
சிரஞ்சீவி என்கிற காப்பு சாதி நடிகர் இறங்கியதும் காப்பு சாதியினர் கம்மாவிலிருந்து பிரியும் மனநிலைக்கு வந்தனர். சிரஞ்சீவி பெரிய நாயகனாக வளரும் முன்பே அல்லு ராமலிங்கையா என்கிற காப்பு காமெடி நடிகர் அவருக்கு தன் பெண்ணைக் கொடுத்து மாப்பிள்ளையாக்கியதில் கூட காப்பு சாதியின் ஆதிக்கமே இருந்தது. காப்பு சாதியினருக்கு ஆராதிக்க ஒரு நடிகன் சிரஞ்சீவி கிடைத்ததும் அவரை தூக்கி உச்சத்தில் வைத்தனர்.
காப்பு நாயகன் சிரஞ்சீவிக்கு எதிராக கம்மா நாயகன் பாலகிருஷ்ணா இறக்கப்பட்டார். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்கள் காப்புவா, கம்மாவா என்கிற மோதலிலேயே கழிந்தன. பாலகிருஷ்ணாவுக்கு எதிரான மோதலில் சிரஞ்சீவி கையிலெடுத்தது தாழ்த்தப்பட்ட சாதியினரை சேர்த்துக் கொண்டு தான். தனது படங்களில் கருத்த, ஏழை கேரக்டர்களிலேயே நடித்தார்.
First blood ரீமேக்கான கைதி போன்ற படங்கள் மோதல்கள் சாதி மோதல் படங்களாக படமாக்கப்பட்டன. இயல்பாக சமூகத்தில் தாழ்நிலையில் உள்ளவர்களின் ரசனையை பணமாக்கும் உத்தியை சிரஞ்சீவி ஏற்றெடுத்தார். அதை வைத்தே கட்சி தொடங்கினார் சிரஞ்சீவி. அந்தப்பக்கம் கம்மா பாலகிருஷ்ணா சும்மா இருக்கவில்லை. தனது லெஜண்ட் படத்தில் ‘அரசியல் உங்களுக்கு சோறு. ஆனால் எனக்கு அது ரத்தம். அரசியல் என் வீட்டிலேயே தொடங்கப்பட்டது. நான் வரணும்னு நினைச்சா யாரும் தடுக்க முடியாது ‘ போன்ற வசனத்தை பேசி உறுமினார்.
இன்று கம்மா சார்பாக பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர் போன்றோரும் நிற்கையில் காப்பு சார்பாக சிரஞ்சீவி, மருமகன் அல்லு அர்ஜூன், மகன் ராம்சரண், தம்பி பவன் கல்யாண், தம்பி நாகேந்திர பிரசாத், அவர் மகன்கள் சாய் தரம் தேஜ், அவர் தம்பி என பெரிய பட்டாளமே போட்டி போட்டுக்கொண்டுள்ளது. மகேஷ்பாபு, கிருஷ்ணாவின் கட்டமனேனி குடும்பம் கம்மா சாதியின் பிரிவு தான். அதனாலே கிருஷ்ணா, ஷோபன்பாபு, முரளிமோகன் போன்றோர் என்.டிஆரால் கண்டுகொள்ளப்படவில்லை.
என்.டிஆர் சிரஞ்சீவிக்கு எதிராக பல நடிகர்களை உள்ளே இழுத்தார். அப்படித்தான் ரஜினி கூட டைகர் படத்தில் அவருடன் நடித்தார். கம்மா பிரிவிலுள்ள ரெட்டி இனத்தை திருப்திப்படுத்தவே அர்ஜுன் ரெட்டி, சாய்ரா நரசிம்ம ரெட்டி போன்ற பெயர்களுடன் படங்கள் இறங்குகிறது. பவன் கல்யாண் அரசியல் கட்சி நடத்துவதால் தன் கொலை செய்யப்பட்ட ரசிகர் வீட்டுக்குப்போய் பண உதவி செய்து அத்தோடு முடித்துக் கொண்டார்.
RRR மிகப்பெரும் வெற்றிக்கு பங்கம் வரக்கூடாது என்பதற்காகவே காப்பு-கம்மா-ரெட்டி இணைப்பாக அது வெளிவந்தது. ஆந்திராவின் இந்த மூன்று பேர் மனதிலும் இடம் பிடித்து விட்டால் வெற்றி நிச்சயம்….
அரசியல் காப்பு, கம்மா இனத்தவரின் பிரிவினாலேயே ஓட்டுக்கள் பிரிந்து போய்க் கொண்டிருந்தது. தொடக்கத்தில் காப்பும் கம்மாவும் ரெட்டிக்கு எதிரான மனநிலையில் ஒன்றாக இருந்தனர். சிரஞ்சீவி என்கிற நடிகர் வந்ததும் ரசிகர்களுக்குள் பிரிவு வந்தது.
கம்மா பிரிவினர் காப்புகளை எதிராக பார்க்கத் துவங்கினர். அரசியலிலும் கம்மா தெலுங்கு தேசம் கட்சியினர் சிரஞ்சீவி , பவன் கல்யாண் எதிர் மனநிலையில் இருந்தனர். இதனால் ரெட்டிகளுக்கு சாதகமாக இருந்தது. அவர்கள் அரசியலில் ஜெயிக்க முடிந்தது. பவன் அரசியலில் செய்த சித்து வேலை பிரிந்த மனோநிலையிலிருந்த காப்பு சாதி, கம்மா சாதியை ரெட்டிகளுக்கு எதிராக ஒன்றிணைத்தது தான்.
ரெட்டி கம்மாக்களில் ஒரு சாதி. அதனாலேயே பவன் தெலுங்கு தேசத்தை கூட்டணி சேர்த்த போது கம்மா ரெட்டிகள் அல்லாதோர் இணைந்து பவனை ஆதரிக்க வலுவான ஓட்டு வாங்கி உருவானது. வெற்றி எளிதானது. ஜெகனின் ரெட்டி வாக்கு வங்கி உடைந்ததால் தோல்வியே பரிசானது. லதா ரெட்டி என்கிற ரோஜா ஜெகனண்ணா, ஜெகனண்ணா என்பதன் பாசமே இந்த ரெட்டி பாசம் தான். பவன் தான் சாத்தியமல்லாத காப்பு-கம்மா நட்பை அரசியலில் உருவாக்கினார். வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. இவ்வாறு செல்வன் அன்பு என்பவர் தெரிவித்துள்ளார்.


