டீசக் மானியத்தை அரசாங்கம் நீக்கியவுடன் பலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் அரசாங்கம் ஒரு திட்டத்தை அமல்படுத்துகிறது என்றால் அது பல ஆய்வுகளுக்குப் பிறகே என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். டீசல் மானிய நீக்கம் சாமானியர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை நான் உங்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன் என்று தகவல் பல்லூடக துறை அமைச்சர் ஃபஹ்மி பட்சில் கூறினார்.
டீசல் மானியம் எந்த தரப்பினருக்காக நீக்கப்பட்டது என்பதனை அனைத்து மலேசியர்களும் அறிந்து கொள்ள வேண்டும். மானியம் நீக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்த பிறகும் மீனவர்களுக்கு 1.65 என்ற விலையிலும், விரைவு பேருந்து, ஆம்புலன்ஸ், பள்ளி பேருந்து, தீயணைப்பு வாகனங்களுக்கு 1.88 காசு என்ற விலையிலும், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட சில தரப்பினருக்கு 2.15 என்ற விலையிலும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.


மேற்கூறிய தரப்பினர் அல்லாதவர்கள் மானியம் இல்லாமல் டீசல் வாங்க கூடிய தகுதி உடையவர்கள் என்று அரசாங்கத்தின் நீண்ட கால ஆய்வுக்கு பிறகே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. வருடாந்தோறும் 2 பில்லியன் லிட்டர் டீசல் கடத்தப்படுகிறது. எங்கே யாரிடம் செல்கிறது அந்த டீசல்? என்று ஃபஹ்மி பட்சில் பந்தாய் டாலாமில் மைடின் மார்ட் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
ஒற்றுமை அரசாங்கம் அனைத்து மலேசியர்கள் மீதும் குறிப்பாக சாமானியர்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது. அதனால் அரசாங்கத்தை எப்பொழுதும் குறை கூறாமல் சாமானியர்களின் நலனில் அரசாங்கம் அக்கறை செலுத்துவதை புரிந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். மைடின் மார்ட் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பின் வசதி குறைந்த 50 பேருக்கு அத்திவாசிய உணவுப் பொருட்களை மைடின் மார்ட் சார்பில் எடுத்து வழங்கினார். இந்த நிகழ்வின் மைடின் ஹோல்டிங் பெர்ஹாட் நிறுவனர் டத்தோ வீரா ஹாஜி அமீர் அலி மைடின், அவரின் துணைவியார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


