பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
ICC T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 29ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து பப்புவா நியூ கினியா அணி விளையாடியது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. 2ஆவது ஓவரில் கேப்டன் அசாத் வாலா 3 ஓட்டங்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
அதன்பின் ஃபரூக்கி வீசிய 2ஆவது ஓவரில் லேகா ஸ்லாகா மற்றும் சேசி இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் டக் அவுட்டாகி வெளியேறினர்.
பின்னர் நவீன் உல் ஹக்கும் தன் பங்கிற்கு ஹிரி ஹிரியை 1 ஓட்டத்தில் வீழ்த்த, பப்புவா நியூ கினியா அணி 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் வந்த விக்கெட் கீப்பர் டோரிகா 27 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்கிளல் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் பப்புவா நியூ கினியா அணி 19.5 ஓவர்களில் 95 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபரூக்கி 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் – ஜத்ரான் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஜத்ரான் டக் அவுட்டாகி வெளியேற, குர்பாஸ் 11 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் குல்புதின் நைப் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிபெற வைத்தார். இறுதியாக 15.1 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக ஆப்கானிஸ்தான் அணி குரூப் சுற்றில் 3ஆவது வெற்றியை பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதனால் நியூசிலாந்து அணி குரூப் சுற்றுடன் T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
ஏற்கனவே இலங்கை அணி வெளியேறிய நிலையில், தற்போது நியூசிலாந்து அணியும் வெளியேறி இருப்பது கிரிக்கெட் இரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
The post T20 WC 2024: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான் appeared first on Thinakaran.


&w=1200&resize=1200,675&ssl=1)