கண்டி – மாத்தளை பிரதான வீதியில் அமைந்துள்ள அம்பதென்ன, குடுகல பகுதியில் உள்ள வாகன உதிரிபாக வணிக மையமொன்றில் இன்று (04) அதிகாலை ஏற்பட்ட திடீர் பாரிய தீ விபத்தினால், நிறுவனமும் அதிலிருந்த பெறுமதியான வாகன உதிரிபாகங்களும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.

இன்று அதிகாலையில் திடீரென ஏற்பட்ட இத்தீ, அப்பகுதி மக்கள் அவதானிப்பதற்குள் மளமளவென வேகமாகப் பரவியுள்ளது. தீ பரவுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகப் பொலிசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கட்டுகஸ்தோட்டை மற்றும் அலவத்துகொடை பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு, கண்டி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டனர். எனினும், தீயின் தீவிரத்தன்மை காரணமாக வணிக மையத்திற்கு கடுமையான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொஹொமட் ஆஸிக்

