மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அரசாங்கம் ஆரம்பத்தில் வாக்குறுதி அளித்த போதிலும், நாட்டில் மீண்டும் மின் கட்டணங்களை அதிகரிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் 4 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 2.88% ஆல் திருத்துமாறு நஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் (NSO) யோசனை முன்வைத்துள்ளது.
எனினும் 1.46 சதவீத அதிகரிப்பை மட்டுமே இந்த காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
கூட்டத்திற்கு பதிவு
எவ்வாறாயினும், நாளை (5) நடைபெறவுள்ள பொதுமக்களின் கருத்துக்கேற்பு கூட்டத்தின் பின்னரே, இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுமக்களின் கருத்துக்கேற்பு கூட்டத்திற்கு பதிவு செய்ய 0770399119 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது.
இதேவேளை 2026 நவம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு 3 சமையல் எரிவாயு கப்பல்களைக் கொண்டுவருவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தவிர, ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள தமது எல்.பி.ஜி முனையத்தை உள்நாட்டுச் சந்தைக்கு எரிவாயு விநியோகிப்பதற்காகப் பயன்படுத்துவதற்குரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய எரிவாயு விநியோகத் தடைகள் காரணமாக நுகர்வோர் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து தமது வருத்தத்தைத் தெரிவித்துள்ள லாஃப்ஸ் நிறுவனம், விநியோகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குத் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

