India
oi-Vigneshkumar
அமராவதி: ஆந்திர பிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்த நிலையில், என்டிஏ கூட்டணி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த கூட்டணி சுமார் 90 சதவீத இடங்களில் கைப்பற்றுகிறது.. பிரதான எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு மிகக் குறைந்த இடங்களே கிடைத்துள்ளன.
நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி 13 மாநகராட்சிகள், 87 நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்வுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

என்டிஏ கூட்டணி வெற்றி
அதில் பெரும்பாலான இடங்கள் என்டிஏ கூட்டணி வசமே சென்றுள்ளது. மாநகராட்சிகளில் தெலுங்கு தேசம் 10 இடங்களிலும், ஜனசேனா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அனந்தபூரில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
நகராட்சிகளை பொறுத்தவரை தெலுங்கு தேசம் 57 இடங்களிலும், ஜனசேனா 17 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. முரசு புயலால் பிரகாசம் பகுதியில் சில நகராட்சிகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த முடியவில்லை. அங்கு நவம்பர் 6ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்
இந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு மிக பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜெகன் மோகன் ரெட்டியின் கோட்டையாக கருதப்படும் கடப்பா மாவட்டத்தின் புலிவெந்துலா நகராட்சியில் கூட அவர்களால் வெல்ல முடியவில்லை. அங்கும் தெலுங்கு தேசம் கட்சியே வென்றுள்ளது. பல ஆண்டுகளாக ஒய்எஸ் குடும்பத்தின் கோட்டையாக இருந்து வரும் புலிவெந்துலா தொகுதியின் எம்எல்ஏவாக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அங்கு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சியின் டி. கீதா குமாரி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் ஒய்எஸ் பிரமீலம்மாவை 13,898 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மொத்தமுள்ள 40 வார்டுகளில் தெலுங்கு தேசம் 34, பாஜக 2, ஜனசேனா ஒன்று, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 3 வார்டுகளை கைப்பற்றின.
தெலுங்கு தேசம்
ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் நாரா லோகேஷ், தங்களுக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த வெற்றி கொண்டாட்டத்துக்கானது அல்ல என்றும் மக்கள் தங்களுக்கு சேவையாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுக்கால நல்லாட்சிக்கு மக்கள் அளித்த ஆதரவாக இதை கருதுவதாகவும், கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சேவையாற்றுவதே இனி இலக்கு என்றும் கூறினார்.
ஜெகன் மோகன் ரெட்டி
தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி விமர்சித்துள்ளார். தேர்தலில் எதிர்க்கட்சிக்கு போட்டியிட வாய்ப்பே அளிக்காமல் வெற்றி பெறுவது எப்படி என்பதை ஆளும் தரப்பு, போலீஸ் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் நிரூபித்துள்ளதாக சாடியுள்ளார். முன்னதாக வேட்பு மனு தாக்கல் சமயத்திலும் பல இடங்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டியிருந்தார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

