இஸ்ரேலுக்கான அமெரிக்க நிதி உதவியை இந்தாண்டு இறுதியுடன் நிறுத்திக் கொள்வது தொடர்பாக, பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பாக பேசிய அவர்.,
“நெதன்யாகுவும், நானும் இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு 4 பில்லியன் டொலர் கொடுப்பதாக ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம். மேலும் சில மாதங்களுக்கு முன்பு அதை நிறுத்துவதாகவும் ஒரு ஒப்பந்தம் செய்தோம்.” என தெரிவித்தார்.
நிதியுதவி இனி தேவையில்லை
வேண்டுமென்றால், தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தற்போது பொருளாதார ரீதியாக மிகவும் வெற்றிகரமான நாடாக வளர்ந்துவிட்டதால், அவர்களுக்கு இந்த நிதியுதவி இனி தேவையில்லை என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நிதியுதவியை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் தங்களுக்கு எதிரான அரசியல் விமர்சனமாகப் பயன்படுத்துவதாகவும் ட்ரம்ப் சாடியுள்ளார்.
கூட்டாளியாக மாறுவதற்கான நேரம் வந்துவிட்டது
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அமெரிக்காவின் இராணுவ நிதியுதவியைச் சார்ந்திருப்பதை படிப்படியாகக் குறைக்க விரும்புவதாக கடந்த காலங்களில் பேசியுள்ளார்.

மேலும் கடந்த ஜூன் மாதம் ஒரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினருக்கு எழுதிய கடிதத்தில், இஸ்ரேல் “உதவி பெறும் நிலையில் இருந்து ஒரு கூட்டாளியாக மாறுவதற்கான” நேரம் வந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

