Last Updated:
நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த வசந்தகுமாரின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த தமிழரின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் சொலுகும்பு மாவட்டத்தில் எவரெஸ்ட் முகாம் அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும்போது மோதிக்கொண்டன. இந்த விபத்தில், Fishtail Air ஹெலிகாப்டரில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த 47 வயதான வசந்தகுமார் உயிரிழந்தார். அவரது உடல் லுக்லா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. படுகாயமடைந்த 2 விமானிகள் உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வசந்தகுமாரின் உடலை விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு ஹெலிகாப்டர்களும் தரையிறங்கும்போது மோதிக்கொண்டது எப்படி என்பது குறித்து நேபாள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அளித்துள்ள பேட்டியில், “நேபாளத்தில் எவரெஸ்ட் முகாம் அருகே தரையிறங்கும்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துள்ளானது. இந்த கோர விபத்தில் சென்னையை சேர்ந்த வசந்தகுமார் (47) உயிரிழந்துள்ளார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். எனவே வசந்தகுமாரின் உடலை விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய தூதரகம் இதை உறுதிசெய்து, தனது இரங்கலையும் தெரிவித்துள்ளது. அவரது உடலை விரைவில் தாயகம் கொண்டுவர நாங்கள் முயற்சி செய்வோம்.” என தெரிவித்தார்.


