அண்மைய எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய இணைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, முதல் கிலோமீட்டருக்கான கட்டணத்தை 110 ரூபாவிலிருந்து 120 ரூபாவாகவும், அதன் பின்னரான ஒவ்வொரு கிலோமீட்டருக்குமான கட்டணத்தை 90 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும் உயர்த்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.முன்னதாக இடம்பெற்ற எரிபொருள் விலை உயர்வின் போதும் கட்டணத் திருத்தம் கோரப்பட்ட போதிலும், அதற்குக் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
“எரிபொருள் விலை 25 ரூபாவால் உயர்ந்துள்ளதுடன், ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வது கூடக் கடினமாகியுள்ளது. நாங்கள் தொடர்ந்து கடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறோம்; நுகர்வோரும் இந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டண உயர்வு தொடர்பான முன்மொழிவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் (NTC) சமர்ப்பித்து, அடுத்த சில நாட்களுக்கு அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கவுள்ளதாக அவர் கூறினார்.
அதிகாரிகள் இதற்கு சாதகமாகப் பதிலளிக்கத் தவறும்பட்சத்தில், மீட்டர்களைத் திருத்தும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி, கட்டணத் திருத்தங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

