
பொகவந்தலாவை கெசல்கமு ஓயாவில் தவறி விழுந்த 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) களுகங்கை கிளை ஆறான கெசல்கமு ஓயாவில் தவறி விழுந்த 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன், தனது தாத்தாவுடன் புல் வெட்டுவதற்காகச் சென்றிருந்த வேளையிலேயே எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் தவறி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டு, மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆற்றில் மூழ்கிய சிறுவன் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, உடனடியாகப் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் பொகவந்தலாவை, லின்போர்ட் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 10 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

